நடிகர் சசிக்குமார் நடித்த படம் ப்ரீடம். இந்த படம் நேற்று ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று ப்ரீடம் படம் ரிலீஸ் ஆகவில்லை. இன்று ரிலீஸ் ஆகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்றும் அந்த படம் தியேட்டர்களுக்கு வரவில்லை. இன்னும் ஒரு வார காலம் இந்த படம் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிக்குமார் நடிகை லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்த படம் ப்ரீடம். இந்தப் படமும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் போலவே இலங்கை தமிழர்கள் பற்றிய கதைக்களத்தில் உருவான படம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சிறையில் இருந்து கைதிகள் விடுதலை குறித்த திரைக்கதையில் இந்த படம் உருவாகி இருப்பதாகவும் தெரிகிறது.
ப்ரீடம் படம் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அந்த படம் வெளியாகவில்லை. இதற்கு பைனான்ஸ் பிரச்சினைதான் காரணம் என்று சொல்லப்பட்டது. இதுகுறித்து நடந்த பேச்சு வார்த்தையில் சுமூகத்தீர்வு எட்ட முடியவில்லை. அதனால் இன்னும் படம் வெளியாகவில்லை. அதனால் படத்தை ஒரு வாரம் வரை தள்ளி வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
பைனான்சியரிடம் இருந்து தயாரிப்பாளர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து 5 கோடி ரூபாய் ஆகி விட்டது என்றும் கூறப்படுகிறது. அதில் 2 கோடி ரூபாய் உடனே வேண்டும் என்று பைனான்சியர் தரப்பில் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த பணத்தை தயாரிப்பாளரால் நேற்று ஒரே நாளில் ஏற்பாடு செய்ய முடியாமல் போயிருக்கிறது.
மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சசிக்குமாருக்கு அட்வான்ஸ் மட்டுமே தரப்பட்டுள்ளது. பேசிய சம்பளம் இன்னும் தரப்படவில்லை என்றும் தெரிகிறது. ஆனாலும் அவர் படம் ரிலீஸாக காத்திருந்த நிலையில், சம்பள பணத்தைக் கூட கேட்காமல் இருந்திருக்கிறார். நல்ல படங்களை மட்டுமே எங்களது நிறுவனத்தில் தயாரிப்போம் என்று ப்ரீடம் படத்தின் தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
சில மோசமான படங்கள் கூட எந்த சிக்கலும் இல்லாமல் எளிதாக வெளியாகும் நிலையில், நல்ல படங்களை மட்டுமே தர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தயாரிப்பாளரின் படம் இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டதே என்று கோலிவுட்டில் வருத்தப்படுகிறார்கள். ரசிகர்களும் இப்போது ஏமாற்றத்தில் உள்ளனர். அதே நேரத்தில் ப்ரீடம் படம் ரிலீஸ் எப்போது என்று படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், ஒரு வாரம் கழித்து படம் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.





