தமிழ் சினிமா வரலாற்றில், இப்போது ரி ரிலீஸ் ட்ரெண்டிங் காலமாக மாறியிருக்கிறது. கடந்த15 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படங்கள், இப்போது ரி ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று வருகின்றன.
அதுவும் கடந்த நான்கு மாதங்களாக தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியான நிலையில், இதில் ஒரு படம் கூட சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெறவில்லை. குறிப்பாக ரஜினி கேமியோ ரோலில் நடித்த லால் சலாம், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் உள்ளிட்ட எந்த படமும் ரசிகர்களுக்கு பெரிய அளவில் திருப்தியை தரவில்லை.
ஆனால் இதற்கிடையே ஆடுஜீவிதம், பிரமயுகம், மஞ்சும்மெல் பாய்ஸ், பிரேமலு போன்ற மலையாள படங்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விட்டன. மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படங்கள் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து பெரிய அளவில் சாதனைகள் புரிந்திருக்கின்றன.
குறிப்பாக 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மஞ்சும்மெல் பாய்ஸ் படம் உலகம் முழுவதும் 225 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மட்டும் இந்த மலையாள படங்கள் ஒவ்வொன்றும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை புரிந்திருக்கின்றன.
இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து வரும் தமிழ் படங்களின் தோல்வியும், கதாநாயகனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஹீரோயிசம்நிறைந்த படங்களும் தான். இந்த சூழ்நிலையில் தற்போது ரி ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக கில்லி படம் கடந்த 20ம் தேதி வெளியாகி, 10 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை 20 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை பிரிந்துள்ளது.
இதை தொடர்ந்து விஜய் நடித்த குஷி, அஜித் நடித்த மங்காத்தா, பில்லா, தீனா அதேபோல் கமலஹாசன் நடித்த இந்தியன் போன்ற படங்கள் திரைக்கு ரி ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. அதேபோல் அடுத்த கட்டமாக விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படமும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற 2 படங்களும் ரி ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆக ரி ரிலீஸ் செய்ய விஜய் சேதுபதி படங்களும் தூசு தட்டப்படுகின்றன.





