நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவரது மனைவி ஜோதிகா அப்பா சிவக்குமார் தம்பி கார்த்தி என சூர்யாவின் குடும்ப பின்னணியே கலைக்குடும்பமாக இருந்து வருகிறது. நடிகர் சிவாஜி கணேசன் குடும்பம் போல, தமிழ் சினிமாவில் மூத்த குடும்பமாக நடிகர் சிவக்குமார் குடும்பம் மதிப்பும் மரியாதையும் மிக்கதாக உள்ளது.
ஒரு கலைஞன் எப்படி ஒழுக்கமுடன் வாழ வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக தமிழ் சினிமாவில் வாழ்ந்து காட்டியவர் நடிகர் சிவக்குமார். குறிப்பாக அவரது ஓவியம் வரையும் கலை திறமை மற்றும் அபார நினைவாற்றல் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. இப்போதும் மேடை ஏறினால் பல ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்களை எல்லாம் புட்டு புட்டு வைக்கிறார்.
அவரது மகன்கள் சூர்யா கார்த்தி இருவருமே உழைப்பால் திறமையால் முன்னுக்கு வந்தவர்கள். ஆரம்பத்தில் நடிக்கவும் வசனம் பேசுவும் நடனமாடவும் தெரியாமல் தடுமாறிய சூர்யா பிறகு, தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு முன்னணி நாயகனாக மாறினார். பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்தார். அதே போல் கார்த்தியும் நல்ல நடிகராக தன்னை நிரூபித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 2013ம் ஆண்டில் நடிகர் சூர்யா சொந்தமாக துவங்கிய தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மென்ட். இதில் முக்கிய பங்குதாரரர்களாக ஜோதிகா கார்த்தி இருந்து வருகின்றனர். இந்த நிறுவனம் சார்பில் சூர்யா கார்த்தி ஜோதிகா நடித்த பல படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் சமீபகாலமாக 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா நடிப்பதில்லை.
மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்கிறார். அதே போல் நடிகர் கார்த்தியும் சமீபகாலமாக 2டி தயாரிப்பு நிறுவன படங்களை தவிர்த்துவிட்டு மற்ற நிறுவனங்களின் தயாரிப்பில் படங்களில் நடிக்கிறார். ஜோதிகா தமிழில் நடிப்பதே வெகுவாக குறைந்து விட்டதால், 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு மூடுவிழா காண சமீபத்தில் சூர்யா தரப்பு முடிவு செய்திருக்கிறது.
இதனால் கடந்த ஜூன் மாத சம்பளத்தை 6 புரடக்சன்ஸ் மேனேஜர்கள் உட்பட அந்த நிறுவனத்தில் பணிசெய்த ஊழியர்களின் வங்கி கணக்கில் போட்ட 2டி நிர்வாகம், நாளை முதல் பணிக்கு வர வேண்டாம் என்று போன் மூலம் தெரிவித்துள்ளது. 13 ஆண்டுகளாக பணிசெய்த அவர்களுக்கு எந்தவித நிதியுதவி காம்பன்சேஷன் எதுவும் தராமல் விரட்டியுள்ளது. மாத சம்பளம் வாங்கிய அவர்கள், பெப்ஸி அமைப்பிடமும் முறையிட முடியாது. திரையில் நீதி நேர்மை நியாயம் நடிகர் சூர்யா, தன்னுடைய நிறுவன ஊழியர்களுக்கே இப்படி அநியாயம் செய்துவிட்டாரே என்றுதான் ரசிகர்கள் புலம்புகின்றனர்.





