தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் திடீரென தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கியுள்ள அவர், தனது 69வது படத்துடன் தமிழ் சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு அரசியலில் முழு ஈடுபாடு காட்டப் போவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அவர் அப்போது நடித்துக் கொண்டிருந்த தி கோட் படம் தற்போது ரிலீசாகி உள்ள நிலையில், அடுத்து இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் தனது 69 வது படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அக்டோபரில் துவங்குகிறது. இந்த படத்தில் நடிகர் மோகன்லால், நடிகைகள் மமீதா பைஜூ, சிம்ரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது.
விஜய் 69 படத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு 250 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இந்த படம் அரசியல் படமாக இல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் கமர்ஷியல் படமாகவே உருவாகும் என்று படத்தின் இயக்குனர் எச் வினோத், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். தனது கடைசி படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளிவந்த படம் லியோ. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் கமல்ஹாசன், விஜயுடன் போனில் தொடர்பு கொண்டு பேசுவது போல் ஒரு காட்சி இருந்தது. அதனால் லியோ படம் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல் இப்போது வெளிவந்துள்ள தி கோட் படத்திலும் இறுதிக்காட்சியில் குளோனிங் செய்யப்பட்ட விஜய் உருவத்தை இயக்குனர் வெங்கட் பிரபு காட்டி இருப்பதால் தி கோட் படமும் இரண்டாம் பாகமாக வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருக்கின்றன. லியோ படம் முதல் பாகத்தில் தோல்வி அடைந்தாலும், இரண்டாம் பாகமாக வெளிவரும்போது நிச்சயமாக பெரிய வெற்றி பெற வாய்ப்புள்ளது.
அதேபோல் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் இதுவரை 320 கோடி ரூபாய்க்கு மேல் தி கோட் படம் வசூலித்துள்ளதால் அந்த படத்தை இரண்டாம் பாகமாக எடுத்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் லியோ, தி கோட் படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகர் விஜய் ஓகே சொல்ல வேண்டும். ஆனால் அவர் அரசியலுக்கு சென்ற பின், இனி சினிமாவில் நடிப்பதில்லை என்ற முடிவோடு இருக்கிறார். ஒருவேளை அவர் 20206 சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி பெறாத பட்சத்தில் மீண்டும் சினிமாவில் நடித்து வந்தால் லியோ, தி கோட் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.





