சீயான் விக்ரமுக்கு இந்த ஆண்டில் வீர தீர சூரன் படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. சித்தா திரைப்படத்தை எடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்த அருண்குமார் இதனை இயக்கியிருந்தார். ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக ஆக்சன் களத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. சொல்லப்போனால் மிகவும் நேர்த்தியாக படத்தைக் காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர் அருண்குமார்.
காளி என்னும் கதாபாத்திரத்தில் விக்ரம் மிரட்ட, படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் பேசப்பட்டன. இப்படியாக வீர தீர சூரன் இரண்டாம் பாகம் ஓரளவு வெற்றி திரைப்படமாகவே அமைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக, விக்ரம் யாருடன் இணையப் போகிறார் என்பதில் இப்போது வரை குழப்பம் நீடித்துக் கொண்டே வருகிறது.
மண்டேலா மாவீரன் என இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த மடோன் அஸ்வின் உடன் தான் விக்ரம் இணையப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டது. இயக்குனருடன் அவர் இருக்கும் போஸ்டரும் வெளியானது. ஆனால் இந்த திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்துக் கொண்டே இருந்தது.
இப்படியான சூழலில் விக்ரம், 96 பட இயக்குனர் பிரேம்குமார் உடன் கைகோர்த்து இருப்பதாகவும், அந்த திரைப்படம் முடிந்த பிறகே அவர் மடோன் அஸ்வினுடன் இணைந்து பணி புரிவார் என்றும் பேசப்பட்டது. இது வெறும் தகவலாகவே இருந்த சூழலில் அதனை உறுதிப்படுத்தினார், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
தயாரிப்பாளுடன் விக்ரம் மற்றும் பிரேம்குமார் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி, படம் குறித்து அறிவிக்கப்பட்டது. ஆக்சன் கதைக்களத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பேசினார்கள். ஆனால் இந்த திரைப்படமும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது. சொல்லப்போனால் இரண்டு திரைப்படங்களுமே கைவிடப்பட்டு விட்டதாகவே பேசுகிறார்கள். ஆனால் அதற்கான காரணம் என்ன என்று தான் இதுவரை தகவல் வெளியாகவில்லை.
தேசிய விருது பெற்ற பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கதையிலும் விக்ரம் நடிப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. தற்போது பாடல் ஆசிரியரும் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் கதையில் விக்ரம் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. கவின் மற்றும் நயன்தாராவை வைத்து விஷ்ணு எடவன் ஒரு திரைப்படத்தை இயக்கி வந்தார். ஆனால் அதன் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டன. அது தொடங்குவதற்கு தாமதமாகும் என்பதால் இந்த இடைவேளையில் அவர் விக்ரமை வைத்து திரைப்படத்தை இயக்கலாம் என்று பேசப்படுகிறது





