சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல மாற்றம் தெரிகிறது. அதாவது கதைகளை நம்பி படம் எடுக்கும் இயக்குனர்கள் அதிகரிக்க துவங்கி இருக்கின்றனர். மாஸ் ஹீரோக்களை வைத்து பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படங்கள் சில ஒரே நாளில் மோசமான தோல்விகளை சந்திக்கும் நிலையில், சின்ன படங்கள் பெரிய வெற்றிகளை பெற்று வருகின்றன.
உதாரணமாக காக்கா முட்டை துவங்கி பண்ணையாரும் பத்மினியும் பார்க்கிங் சித்தா குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் லப்பர் பந்து டூரிஸ்ட் ஃபேமிலி மாமன் டிஎன்ஏ பறந்து போ என பல படங்கள் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்றிருக்கின்றன. இந்த படங்கள் எல்லாமே 5 கோடி முதல் 12 கோடி ரூபாய் வரை சின்ன பட்ஜெட்டில் உருவான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படங்களில் நடித்த அனைவருமே 2ம் நிலை 3ம் நிலை நடிகர்களாக தான் இருக்கின்றனர். ஆனால் படத்தின் கதைக்களம் வெற்றியை தேடித் தந்திருக்கிறது. மீண்டும் மீண்டும் இந்த படங்களை ரசிகர்கள் சிலாகித்தும் பாராட்டியும் பேசிய ஜெயிக்க வைத்திருக்கின்றனர். இத்தகைய படங்களை கொண்டாடி ஊக்குவிக்கின்றனர்.
இந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 3 பிஹெச்கே. இந்த படத்தில் நாயகனாக சரத்குமார் நாயகியாக தேவயானி மற்றும் அவர்களது பிள்ளைகளாக சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வாடகை வீட்டில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தின் சொந்தமான கனவு இல்லம் பற்றிய கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது.
எட்டுத் தோட்டாக்கள் குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கிய படம்தான் 3 பிஹெச்கே. இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது. அம்ரித் ராம்நாத் இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தார்.
தியேட்டர்களில் கணிசமான வசூலை அடைந்த இந்த படம் மிக விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி 3 பிஹெச்கே திரைப்படம் வெளியாக உள்ளதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.





