நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 1954ம் ஆண்டில் நடித்த படம் எதிர்பாராதது. இந்த படத்தை நாராயண மூர்த்தி டைரக்ட் செய்திருந்தார். நடிகர் சிவாஜி கணேசன் நடிகை பத்மினி நடிகர் நாகையா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர் இந்த படத்தில் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானவர்தான் சிவி ஸ்ரீதர்.
அவர்தான் பின்னாலில் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்பாராதது படத்தின் கதைப்படி சிவாஜியும் பத்மினியும் நெருக்கமாக காதலிப்பார்கள். ஆனால் சிவாஜியின் தந்தை நாகையா மனைவியை இழந்தவர் என்பதால் இரண்டாம் தரமாக பத்மினியை திருமணம் செய்து கொள்கிறார்.
அதனால் சிவாஜிக்கு பத்மினி சித்தியாகி விடுகிறார். நாகையா திடீரென மறைந்து போகிறார். அதன்பிறகு ஒரு நாள் சிவாஜி, தனது முன்னாள் காதலி இன்னாள் சித்தி பத்மினியை தொடுகிறார். அப்போது அதிர்ச்சி அடையும் பத்மினி சிவாஜியை வெறிகொண்டு தாக்குகிறார்.
படத்தில் வரும் அந்த காட்சியை படமாக்கிய போது படப்பிடிப்பு தளத்தில் பத்மினி உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியை நிஜமாகவே அடித்துவிட்டார். அவர் கன்னத்தில் அடித்த அறையில் சிவாஜிக்கு கன்னம் வீங்கி விட்டது. அந்த காட்சி முடிந்ததும் கிளம்பி போன சிவாஜி இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கு வரவில்லை.
கன்னத்தில் விழுந்த பலத்த அடியின் காரணமாக அவருக்கு காய்ச்சல் வந்த நிலையில் ஓய்வெடுத்து வந்தார். மேலும் நிஜமாகவே பத்மினி அடித்துவிட்டதால் கவலையில் அவர் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சிவாஜியை சமாதானப்படுத்த பத்மினி அவரது வீட்டுக்கு சென்றார்.
அப்போது சிவாஜியை சமாதானம் செய்து பேசிய அவர் புத்தம் புதிய பியட் கார் ஒன்றை வாங்கி சிவாஜிக்கு பத்மினி பரிசாக அளித்தார். இதுதான் சிவாஜி கணேசனின் முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகன் சிவாஜியை கன்னத்தில் அடித்து விட்டு பிறகு பியட் கார் வாங்கி பரிசளித்து அவரை சமாதானப்படுத்திய நடிகை பத்மினி என்பது குறிப்பிடத்தக்கது.





