தமிழ் சினிமாவில் பொக்கிஷமான கலைஞர்களில் ஒருவர்தான் இயக்குனர் மற்றும் நடிகர் விசு. அவர் இயக்கி நடித்த குடும்ப படங்கள் ஒவ்வொன்றும் முத்துக்களைப் போன்றவை. குடும்பம் சார்ந்து சமூகம் சார்ந்து அவர் கூறிய கருத்துக்களும் திரையில் அவர் கொண்டு வந்த கதாபாத்திரங்களும் என்றென்றும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவை.
தனது சிறந்த படங்களால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியவர் விசு. ரைமிங் ஆன அவரது படத்தின் தலைப்புகள் பெண்களுக்கானது. பெண்களின் முன்னேற்றம் குறித்த சமூக அக்கறையுள்ள பல படங்களை தந்தவர் விசு. அதில் கடந்த 1986ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி வெளியான படம் சம்சாரம் அது மின்சாரம். அந்த ஆண்டில் சிறந்த பொழுதுபோக்கு படம் என்ற தேசிய விருதை வென்றது. அது மட்டுமின்றி பல்வேறு விருதுகளையும் இந்த படம் வென்றது.
ஒரு கூட்டு குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் கணவன் மனைவி உறவு மகன்களின் பிரச்சனை மகளின் காதல் என ஒரே படத்தில் ஒரு குடும்பத்தை ரசிகர்களின் கண்முன் காட்டிய படம். அம்மையப்ப முதலியார் என்ற கேரக்டரில் விசு அவரது மனைவி கோதாவரியாக கமலா காமேஷ் மூத்த மகனாக சிதம்பரம் கேரக்டரில் ரகுவரன் மூத்த மருமகளாக லட்சுமி நடித்திருந்தார்.
விசுவின் 2வது மகனாக சந்திரசேகர் 2வது மருமகளாக மாதுரி 3வது மகனாக காஜா ஷெரீப் ஒரே மகளாக இளவரசி அந்த வீட்டில் வேலை செய்பவராக மனோரமா சம்பந்திகளாக கிஷ்மூ டெல்லி கணேஷ் இளவரசியின் கணவராக திலீப் என ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட கேரக்டர் போல அந்த படத்தில் நடித்து அசத்தியிருந்தார்கள்.
25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய இந்த பட விழாவில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஏவிஎம் ஸ்டுடியோவில் இந்த படத்திற்காக அமைக்கப்பட்ட வீடு பல ஆண்டுகளாக சம்சாரம் அது மின்சாரம் செட் என்று அழைக்கப்பட்டது. அந்த வீட்டில் பல படங்களின் படப்பிடிப்புகளும் நடந்தன.
பல சிறப்புகளைக் கொண்ட இந்த படத்தைக் தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திற்கு கௌரவத்தை தந்தது. இந்த படம் வெளியாகி நேற்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்தது. இது போன்ற நல்ல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வராதா என்று இப்போதும் ரசிகர்கள் ஏங்குகிறார்கள். இது போன்ற கதையை மையமாக வைத்து எத்தனையோ டிவி தொடர்கள் வந்துவிட்டன. பல சீரியல் இயக்குனர்களுக்கு சம்சாரம் அது மின்சாரம் படம்தான் ஒரு இன்ஸ்பிரேஷன் என்றால் அது மிகையல்ல.





