சினிமாவில் ரசிகர்கள் ரசிப்பதற்கான காட்சிகளை உருவாக்குவது மாறி, இப்போது ரசிகர்கள் மீது திணிப்பது போன்ற காட்சிகளை தான் பல படங்களில், பல இயக்குனர்கள் செய்து வருகின்றனர். இது படத்துக்கும், காட்சிக்கும் அவசியமில்லாத ஒன்று என்று ரசிகர்களே தெரிந்துக்கொண்டு இத்தனை தண்டச்செலவு செய்து இந்த காட்சி அவசியம்தானா, என்று விமர்சிப்பதும் உண்டு.
ஆரம்ப கால படங்களில், டூயட் காட்சிகளில் நாயகன், நாயகி நடனம் ஆடும்போது அவர்களுக்கு பின்னால் 50 முதல் 100 பேர் ஆடச் செய்வது வழக்கமாக இருந்தது. இதற்கான காஸ்ட்யூம் செலவு, சம்பளம் என தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு பாடல் காட்சிக்கும் ஏகப்பட்ட செலவுகளை செய்வது வழக்கமாக இருந்தது.
ஆனால் ஒரு கட்டத்தில் பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றவர்கள் இந்த துணை நடன நடிகர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்தனர். அதிகபட்சம் 10 பேர் இருப்பதே அவர்களது படங்களில், பாடல் காட்சிகளில் அரிதாக இருந்தது. இதனால் பாடல் காட்சியை படமாக்குவதிலும் இருந்த சிரமங்கள் குறைந்தது.
ஆனால் இப்போது பாடல் காட்சிகளில், சண்டை காட்சிகளில் பிரமாண்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான துணை நடிகர்களை நடனம் ஆட வைப்பது, சண்டை காட்சிகளில் நடிக்க வைப்பதை சில இயக்குனர்கள் வழக்கப்படுத்தி வருகின்றனர். லியோ படத்தில் ஒரு பாடல் காட்சியில் 2 ஆயிரம் நடனக்கலைஞர்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அப்படிப்பட்ட பங்கேற்றவர்களில் பாதிப் பேருக்கு சம்பளமே தரவில்லை எனவும் வாரக்கணக்கில் நடனக் காட்சியில் நடித்த தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அந்த நடனக் கலைஞர்கள் தரப்பில் புகார் எழுந்தது. பிறகு அமெச்சூர் நடனக் கலைஞர்கள், யூனிட் நடனக் கலைஞர்கள் என பிரித்து இரு விதமான சம்பளம் தரப்பட்டதாகவும் புகார் கிளம்பியது.
இந்நிலையில் இப்போது வேட்டையன் படத்திலும் ரஜினிகாந்த் பங்கேற்கும் ஒரு பாடல் காட்சியில் 500 நடனக் கலைஞர்களுடன் நடனமாடி இருக்கிறார். இப்படி 500 பேருடன் நடனக் காட்சியை டான்ஸ் மாஸ்டர் தினேஷ்தான் படமாக்கி உள்ளார். லியோ படத்தை போல, சம்பள பிரச்னை இல்லாமல் 500 பேர் பங்கேற்ற பாடல் காட்சியை பிரச்னையை சுமூகமாக முடித்தால் சரி என்று கலாய்க்கின்றனர் ரசிகர்கள்.





