தமிழ் சினிமாவில் கடந்த 1980 90 களில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ். இயக்குனர் பாரதிராஜா தான் அவரது குருநாதர். என்னுடைய கலையுலக வாரிசு என புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கே பாக்யராஜை தான் அறிவித்தார். தாவணிக்கனவுகள் படத்தில் கே பாக்யராஜூடன் சிவாஜி கணேசன் இணைந்து அப்போதே நடித்திருந்தார்.
சுவரில்லாத சித்திரங்கள் நேற்று இன்று நாளை முந்தானை முடிச்சு அந்த 7 நாட்கள் மௌன கீதங்கள் டார்லிங் டார்லிங் டார்லிங் தூறல் நின்னு போச்சு தாவணிக்கனவுகள் பவுனு பவுனுதான் இது நம்ம ஆளு எங்க சின்ன ராசா ராசுக்குட்டி என அந்த காலகட்டத்தில் கே பாக்யராஜ் இயக்கிய நடித்த படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற மாபெரும் வெற்றிப் படங்களாக இருந்தன.
யதார்த்தமான கதைக்களங்களில் எளிய மனிதர்களின் மன உணர்வுகளை கதைகளாக்கி அதில் சந்தர்ப்ப சூழல்களால் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்தி கே பாக்யராஜ் இயக்கிய படங்கள் எல்லாமே அற்புதமான படைப்புகள்தான். காமெடி காதல் சென்டிமென்ட் பாடல்கள் என எல்லாவிதங்களிலும் ரசிகர்களின் நாடி பிடித்து படம் எடுக்கும் இயக்குனர்களில் கே பாக்யராஜூம் மிக மிக முக்கியமானவர்.
கே பாக்யராஜ், ஆரம்பத்தில் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக இசையமைப்பாளராக கதை வசனகர்த்தாவாக கே பாக்யராஜ் தமிழ் சினிமாவில் இப்போது 50 ஆண்டுகளை தொட்டிருக்கிறார். அதனால் அவருக்கு தமிழ் சினிமா துறை சார்பில் விரைவில் 50வது ஆண்டு பாராட்டுவிழா நடத்தப்பட உள்ளது.
இந்த விழாவில் தமிழ் சினிமா இயக்குனர்கள் முன்னணி நடிகர்கள் நடிகைகள் கே பாக்யராஜ் மூலம் சினிமா அறிமுகம் செய்யபப்ட்ட நடிகர் நடிகைகள் அவரிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் அவரது படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள் என அனைவரும் இந்த விழாவில் பங்கேற்கும் விதமாக இந்த பொன்விழா கோலாகலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கே பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜூடன் ரஜினி கமல் இருவருமே நடித்திருக்கின்றனர். பாரதிராஜா இயக்கிய படங்களில் கமல் ரஜினி நடித்த போது, கே பாக்யராஜூம் அவர்களுடன் நடித்திருக்கிறார். உதவி இயக்குனராக அவர்களுடன் இருந்திருக்கிறார். அதே போல் பூர்ணிமாவுடன் கமல் ரஜினி இருவருமே நடித்திருக்கின்றனர். இந்நிலையில் கே பாக்யராஜூக்கு நடக்கும் 50வது ஆண்டு பாராட்டு விழாவில் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்க ரஜினி கமல் ஆகியோரை நடிகை பூர்ணிமா பாக்யராஜ், அவரது மகன் நடிகர் சாந்தனு ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.





