அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். தொடர்ந்து கார்த்தி நடித்த மெட்ராஸ் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை சியான் விக்ரம் நடித்த தங்கலான் உள்ளிட்ட படங்களை பா ரஞ்சித் இயக்கினார்.
இதில் சில படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியும் ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றன. ஆனால் கடந்தாண்டில் தீபாவளிக்கு வெளியான தங்கலான் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது நடிகர் ஆர்யா நடிக்கும் வேட்டுவம் என்ற படத்தை பா ரஞ்சித் இயக்கி தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் சோபிதா துலிபாலா லிசி ஆண்டனி கலையரசன் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களின் நடித்து வருகிறார்கள். காரைக்குடியில் வேட்டுவம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நாகை மாவட்டம் விழுந்தமாவடி என்ற ஊரில் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்நிலையில் அப்பகுதியில் நேற்று சண்டைக்காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம் பகுதியைச் சேர்ந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் என்பவர் காரில் தாவி ஏறிச் செல்லும் காட்சி படம்பிடிக்கப்பட்டது. அப்போது 52 வயதான மோகன்ராஜ், எதிர்பாராத விதமாக காரில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே அங்கிருந்த படக்குழுவினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர். இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் வேட்டுவம் படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கவனக்குறைவு மற்றும் அலட்சியமாக படப்பிடிப்பை போதி பாதுகாப்பு இல்லாமல் நடத்தி ஒரு உயிர் போக காரணமாக இருந்ததாக கூறி படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





