தமிழ் சினிமாவில் குறைந்த எண்ணிக்கையில் படங்களை இயக்கினாலும் அதில் மிக நல்ல படங்களை தந்து ரசிகர்களின் மனங்களை வெகுவாக கவர்வது ஒரு சில இயக்குனர்கள்தான். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குனர் செல்வராகவன். அவரது காதல் கொண்டேன் படம் பெரிய அளவில் வரவேற்பை, ரசிகர்கள் கவனத்தை பெற்றது.
அதே நேரத்தில் காதல் கொண்டேன் படம் மூலமாக ஒரே கல்லில் 3 மாங்காய்களை அடித்தார் இயக்குனர் செல்வராகவன் என்றால் அது மிகையல்ல. தனது தம்பி தனுஷை ஒரு நடிகராக தமிழ் சினிமாவுக்கு தந்து வெற்றி பெற்றார். காதல் கொண்டேன் படம் செல்வராகவனுக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
அதே போல் இந்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை சோனியா அகர்வால், செல்வராகவன் காதல் நிறைவேறி ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து தம்பதி ஆகியதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் புதுப்பேட்டை 7ஜி ரெயின்போ காலனி என பல படங்களை இயக்கினார் செல்வராகவன். கடந்த சில ஆண்டுகளாக பீஸ்ட் பகாசுரன் மார்க் ஆண்டனி ராயன் என பல படங்களில் நடித்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார்.
கடந்த 2004ம் ஆண்டில் தயாரிப்பில் ஏஎம் ரத்னம் தயாரிப்பில் ரவி கிருஷ்ணா சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். நா முத்துக்குமார் பாடல்களை எழுதியிருந்தார். தெலுங்கில் 7ஜி பிருந்தாவன் காலனி என்ற பெயரில் இந்த படம் வெளியானது.
தற்போது 20 ஆண்டுகள் கடந்த நிலையில் 7ஜி ரெயின்போ காலனி தமிழ் மற்றும் தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ரவி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக இப்போது மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடித்திருக்கிறார். மீண்டும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் தமிழ் மற்றும் தெலுங்கில் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது. அது முடிந்தவுடன் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் துவங்கி விடும். மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முந்தைய படம் போலவே, இந்த படத்திலும் இயக்குனர் செல்வராகவன் தன் திறமையை காட்டியிருப்பார் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.





