பருத்திவீரன் படம் தயாரிப்பு விஷயத்தில், துவக்கத்தில் இயக்குநர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் ஏற்பட்ட பிரச்னை என்ற நிலை மாறி, இப்போது ஒரு படைப்பாளியாக அமீரை, அவமதிக்கும் விதமாக பேசியதை ஏற்க மறுக்கும் நிலைக்கு தமிழ் சினிமா படைப்பாளிகள் மாறி இருக்கின்றனர்.
இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், கரு பழனியப்பன், சமுத்திரக்கனி, சசிக்குமார், பொன்வண்ணன், நந்தா பெரியசாமி, பாடகர் சிநேகன் என பலரும் எதிர்ப்பு குரல் எழுப்பிய நிலையில், வருத்தம் மட்டும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜன்.
இதில் சிலரது விமர்சனங்கள் மிக மிக கடுமையாக இருந்தது. குறிப்பாக கரு. பழனியப்பன், இந்த விஷயத்தை எல்லாம் நடிகர் சிவக்குமார் கண்டுக்கொள்ள மாட்டாரா என கேள்வி எழுப்பினார். இந்த சீன் எல்லாம் இங்க வேண்டாம். ஒத்தை பைசா பாக்கி இல்லாமல், திருப்பிக் கொடுக்கணும் என்று கண்டிக்கும் விதத்தில் சமுத்திரக்கனி பதில் அறிக்கை வெளியிட்டார்.
இப்போது நந்தா பெரியசாமி வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், பருத்திவீரன் படத்தில் முத்தழகிக்கு நேர்ந்த கொடுமையை விட, பருத்திவீரன் படத்தை இயக்கிய அமீருக்கு நேர்ந்துள்ளது. மிகப்பெரிய வன்முறையை அவர் மீது நடத்தி இருக்கிறார்கள். கார்த்தியை நம்பிய முத்தழகியின் முடிவு வேண்டுமானால் முடியலாம். ஆனால் அமீருக்கு அப்படியல்ல.
அமீர் இன்னும் வீறுகொண்டு எழுவார். படைக்கு அஞ்சாத அவருடன் கைகோர்க்க தம்பிமார்கள் நாங்கள் இருக்கிறோம். தொழுகை தவறாத அவர் அருகில், இறைவனும் சத்தியமும் இருக்கிறது. துரோகமற்ற பல பருத்தி வீரன்களை அவர் இனி தொடர்ந்து படைப்பார். அவர் பக்கத்தில் ஆதரவாக துணை நிற்போம் என தெரிவித்துள்ளார்.
ஆனால் இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு பருத்திவீரன் போல ஒரு படத்தில் கார்த்தி நடித்துவிட்டால், நான் படத்தில் நடிப்பதை விட்டுவிடுகிறேன் என சவால் விடும் அளவுக்கு சென்றிருக்கிறார். இப்படி பலத்த எதிர்ப்புகளும், கண்டனங்களும் வந்தும் இன்னும் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் வேடிக்கை பார்க்கிறது சிவக்குமார் குடும்பம்.





