தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே போல் தீபாவளி பண்டிகை, இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாக இருந்து வருகிறது. இந்த நாட்களில் பண்டிகை கால திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பண்டிகை நாட்களில் வரவேற்பு அதிகமாக உள்ளது.
ஆனால் வருகிற 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகை நாட்களில் முன்னணி நடிகர்களில் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் மட்டுமே வெளியாகும் எனத் தெரிகிறது. அதுவும் குட்பேட் அக்லி படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் இன்னும் விலை போகாததால், தயார் நிலையில் உள்ள விடாமுயற்சி பொங்கல் களத்தில் இறங்குகிறது.
நடிகர் விஜய் நடித்த தி கோட் படம், கடந்த மாதம் 5ம் தேதி வெளியாகி, 460 கோடி ரூபாய் வசூலித்தது. இப்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு வர வாய்ப்பில்லை. அதே போல் ரஜினி நடித்த வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி ரிலீஸான நிலையில், அவரது கூலி படம் ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டுக்கு வெளியாக வாய்ப்புள்ளது.
பொங்கலுக்கு முன்னதாக இன்று 3 மாத கால இடைவெளியில் சில முக்கிய படங்கள் வௌியாகின்றன. அதன்படி வருகிற நவம்பர் 14ம் தேதி சூர்யா நடிப்பில் கங்குவா படம் ரிலீஸ் ஆகிறது. வருகிற 31ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடித்த அமரன், ஜெயம் ரவி நடித்த பிரதர், கவின் நடித்த பிளடி பெக்கர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
வருகிற டிசம்பர் மாதம் 5ம் தேதி தெலுங்கில் இருந்து டப்பிங் செய்யப்பட்ட புஷ்பா 2 படம் வெளிவர உள்ளது. கிறிஸ்மஸ் விடுமுறையில் இன்னும் சில படங்கள் வர வாய்ப்பு இருந்தாலும் அவை முன்னணி நடிகர்களின் படங்களாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கூலி, குட் பேட் அக்லி, தளபதி 69 படங்கள் அடுத்த ஆண்டில் பெரிய படங்களாக இருக்கும்.
இந்நிலையில் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு வரப் போகும் படங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்த உத்தேச பட்டியல்படி அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி, நடிகர் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் என்ற படமும், சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் ஆகிய படமும் பொங்கலுக்கு வெளிவரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள தெலுங்கு படமான கேம்ஸ் சேஞ்சர் படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இதில் அஜீத்குமாருக்கு அதிகளவில் திரையரங்குகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.





