நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் 12ம் தேதி தனது 73 பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தமிழ் சினிமா உலகம் சார்ந்தவர்கள், அரசியல் பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர்.சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாள் வாழ்த்துகள் டிரண்டிங் ஆனது.
ஆனால் போயஸ்கார்டனில் அவரை நேரில் பார்த்து வாழ்த்துகள் சொன்ன திரண்டிருந்த ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கவில்லை. அதனால் அவரது வீட்டின் முன் நின்ற ரசிகர் கூட்டம், நாங்கள் வணங்கும் சிவனே, வெளியே வா, ஜெயிலர் முத்துபாண்டியனே வெளியே வா என கோஷமிட்டு அழைப்பு விடுத்தனர். ஆனால் ரஜினி வெளியே வராததும் சோஷியல் மீடியாவில் வைரலானது.
ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று அதிரடி வெளியீடாக தசெ ஞானவேல் இயக்கும் ரஜினி 170 படத்தின் டைட்டில் டீசருடன் வெளியாகி அதிரடி கிளப்பியது. வேட்டையன் என அந்த படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. குறி வெச்சா இரை விழணும் என்ற ரஜினி டயலாக் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. படத்தின் பெயர் ஏற்கனவே, சந்திரமுகி படத்தில் ராஜாவாக வரும் வேட்டையன் ராஜா என்பதில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தின் டீசரும் 12ம் தேதி வெளியாகி அலப்பரை கிளப்பியது. மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினி இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களை குஷிப்படுத்தியது. கேமியோ ரோல் என்றாலும் ரஜினி 22 காட்சிகளில் வருகிறார். 45 நிமிடங்கள் வரை படத்தில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி கூறி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் முதல் பெயராக எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிட்டு இருக்கிறார். அடுத்து பன்னீர் செல்வம், அண்ணாமலை, சந்திரபாபு நாயுடு, கமல்ஹாசன், இளையராஜா, வைரமுத்து, எஸ்பி முத்துராமன், ஷாருக்கான், சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் பெயரை குறிப்பிட்டும், நலம் விரும்பிகள், நண்பர்கள், என்னை வாழ வைக்கும் ரசிக பெருமக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
இதில் கடைசியாக உழைப்பு, பொழுதை போக்கும், வறுமையை நீக்கும், உடலினை காக்கும், உழைத்திடுவோம், மகிழ்ந்திடுவோம் என்ற வாசகங்களை எழுதியுள்ளார். இதுவரை மேடைகளில் குட்டிக்கதை சொல்லி வந்த ரஜினிகாந்த், இனி தனது அறிக்கைகளில் இதுபோன்ற அறிவுரை வாசகங்களையும் இந்த பிறந்த நாள் முதல் எழுத திட்டமிட்டுள்ளதாக இதன் மூலம் தெரிகிறது. இதுவும் ரசிகர்களுக்கு பஞ்ச் டயலாக் மாதிரி விரைவில் மாறிவிட அதிக வாய்ப்புள்ளது.





