நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வந்த துவக்கத்தில், கிடைத்த கேரக்டர்களில் நடித்தார். குறிப்பாக அவருக்கு நடிகராக வாய்ப்பளித்தது அவரது குருநாதர் கே. பாலசந்தர்தான். அதற்கு பிறகு பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த 16 வயதினிலே, பரட்டை கேரக்டர் ரஜினியை, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. நாளடைவில் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் ரஜினிகாந்த்.
பிறகு ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்த சில படங்கள் பெரி்ய அளவில் வரவேற்பை பெற்றன. அப்போது கமல் பெரிய நடிகராக வளர்ந்த நிலையில் ரஜினியும் அந்த படங்களில் நடித்ததால், நல்ல வரவேற்பை அவரும் பெற்றார். ஆனால் இருவரும் தொடர்ந்து நடித்தால், தயாரிப்பாளர்கள் அதிக லாபமடைந்து, நமது வளர்ச்சி இருக்காது என்ற நிலையில் இருவரும் கலந்து பேசி தனித்தனியாக நடிக்க முடிவெடுத்தனர்.
அதன்பிறகு ஸ்டைல், அதிரடி ஆக்சன் என கமர்ஷியல் நாயகனாக ரஜினி தொடர வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, அபூர்வ சகோதரர்கள் என தனது பாணியில் நடிப்பு பயணத்தை தொடர்ந்தார் கமல்ஹாசன். ஆனால் இருவரும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களாக வளர்ந்தனர். எம்ஜிஆர், சிவாஜியை போல அடுத்த நிலையில் ரஜினி, கமல் என பேசப்பட்டனர்.
சினிமாவில் வளர்ந்த பிறகு தனக்கான இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை ரஜினிகாந்த் தேர்வு செய்ய துவங்கினார். அவருக்கான கதைகளை அவரே தேர்வு செய்தார். கதையில் மாற்றங்களை செய்தார். ரஜினிக்கான படங்களை கேஎஸ் ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா, சுந்தர் சி போன்றவர்கள் உருவாக்கி தந்தனர்.
ஆனால் ரஜினி, தனது படத்தின் 2ம் பாகத்தில் நடிப்பதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். ஒரு படத்தில் நடிப்பது, அடுத்து வேறு ஒரு படத்தில் நடிப்பது என்ற கொள்கையில் இருந்தார். அதனால்தான் பில்லா படத்தில் முதல், 2வது பாகங்களில் அஜீத் நடித்தார். அதில் அஜீத் நடிக்கட்டும் என பரிந்துரை செய்தவரும் ரஜினிதான் என்று கூறப்படுகிறது.
இப்போது ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிப்பது, தமிழ் சினிமா இயக்குநர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது சினிமா பயணத்தில் இதுவரை 2ம் பாகத்தில் நடிப்பதில்லை என்று கொள்கையில் இருந்த ரஜினி, ஜெயிலருக்கு மட்டும் 2ம் பாகத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இதற்கு காரணம், ஜெயிலர் படத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் என்பதும் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.





