அனுராக் காஷ்யப், இந்தி படவுலகில் மிக முக்கியமான இயக்குநராக அடையாளம் காணப்பட்டவர். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் அசத்தலான வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். இவரது கர்ஜனை குரலாக ஒலித்தது, விடாமுயற்சி பட இயக்குநர் மகிழ்திருமேனி குரல்தான்.
இமைக்கா நொடிகள் படத்தில், நயன்தாரா போலீஸ் அதிகாரியாகவும், அவரது தம்பியாக அதர்வாவும் நடித்திருந்தனர். கேமியோ கேரக்டரில் நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்ட வெற்றிப் படமாக அமைந்தது.
பாலிவுட் உலகில் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை விருதுகளின் இயக்குநர் என்றுதான் அழைக்கின்றனர். ஏனெனில் அவர் இயக்கிய பல படங்கள் முக்கிய விருதுகளை பெற்றிருக்கின்றன. கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர், பிளாக் பிரைடே, ராமன் ராகவ் போன்ற படங்கள் மிக முக்கியமானவை. இவரது படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெறுபவையாக இருந்து வருகின்றன. விரைவில் இவரது படம் கென்னடி ரிலிஸ் ஆக உள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜை, அனுராக் காஷ்யப்புக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் நீங்கள் இயக்கும் படத்தில் ஏதேனும் ஒரு சிறு வாய்ப்பாவது கொடுங்கள். அந்த காட்சியில் வந்தவுடன் இறந்த போகிற ஒரு சிறிய கேரக்டராக இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்டு கொண்டதால், அதுபோன்ற ஒரு கேரக்டரையே தனது லியோ படத்தில் தந்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.
இந்தியில் முன்னணி இயக்குநராக வலம்வரும் அனுராக் காஷ்யப், மிகச் சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர். அதை இமைக்கா நொடிகள் படம் பார்த்த பலரும் அறிந்தனர். மீண்டும் அடுத்தடுத்த படங்களில் அவர் வில்லன் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதே, தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், பாலிவுட்டில் ஸ்டார் டைரக்டராக உள்ள அனுராக் காஷ்யப், தமிழ் சினிமாவிலும் இயக்குநராக தனது காலடியை பதிக்க வருகிறார். விரைவில் அவரது இயக்கத்தில், தமிழ் படம் இயக்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. அவரது முதல் படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பவர், பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தான். இசையமைப்பது மட்டுமின்றி நடிப்பதிலும் தனது திறமையை வெளிப்படுத்தி அவருக்கு, தமிழில் தான் இயக்கும் முதல் படத்தில் ஹீரோ வாய்ப்பை தந்திருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.





