தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அதன் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். ஒரு திரைப்படம் வெளியானதும், அது குறித்து அடுத்த சில மணி நேரங்களிலேயே யூடியூபில் பலரும் இங்கு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சகர்களில் முக்கியமானவராகவும், சர்ச்சை மிக்கவராகவும் கருதப்படுபவர் ப்ளூ சட்டை மாறன்.

ஒரு திரைப்படம் வெளியானால், அது குறித்து மட்டும் கருத்து தெரிவிக்காமல் படத்தில் இடம்பெற்ற நடிகர் நடிகைகளை தரைமட்ட அளவுக்கு பேசி வம்பு இழுப்பதன் மூலம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனார் ப்ளூ சட்டை மாறன். குறிப்பாக, ரஜினிகாந்த், அஜித் குமார் படங்கள் குறித்து மட்டுமே சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பதாக இங்கு சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், நடிகர் நடிகைகளை ப்ளூ சட்டை மாறன் உருவக்கேலி செய்வதாகவும் இங்கு புகார் உண்டு.
அதேசமயம், ப்ளூ சட்டை மாறன் சரியாகத்தான் விமர்சனம் செய்கிறார் என்றும், நேர்மையான விமர்சகர் எனவும் மற்றொரு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர். இப்படி இருக்க, தமிழ் சினிமாவில் எந்த திரைப்படம் எடுத்தாலும் அதை உலக சினிமா அளவிற்கு ஒப்பிட்டு பேசும் ப்ளூ சட்டை மாறன், ஆன்ட்டி இந்தியன் எனும் ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கி படுதோல்வியை சந்தித்தார்.

அவருக்கே ஒழுங்காக படம் இயக்கத் தெரியாத போது, மற்றவர் குறித்த அவர் எப்படி பொறுப்பில்லாமல் பேசலாம் என்றும் இங்கு ஒரு சிலர் கூறுகின்றனர். இந்த சூழலில், சமீபத்தில் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காகம் ஒரு இடத்தில் இருக்காது; அங்கும் இங்கும் பறந்து கொண்டிருக்கும். ஆனால் பருந்து அமைதியானது, காகம் பருந்து உயரத்திற்கு பறக்க ஆசைப்படும் ஆனால் கீழே விழுந்து விடும் அதுவால் பறக்க முடியாது என்று பேசியிருந்தார்.
தன்னை பற்றிதான் ரஜினிகாந்த காகம் என்று கூறினார் என்றும், தனது பெயரை மேடையில் கூற அவருக்கு திராணி இல்லை என்றும் சம்பந்தமில்லாமல் ஆஜரானார் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன். இது மட்டுமல்லாமல், தொடர்ந்து பருந்து குஞ்சு என்று கூறி ரஜினி ரசிகர்களை அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். நாள்தோறும் இது தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர், ரஜினி ரசிகர்களை வம்பு இழுத்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மூத்த நடிகர் காக்கா ராதாகிருஷ்ணனை, ரஜினியுடன் ஒப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் கருத்து பதிவிட்டுள்ளார். 86 வயது வரை தமிழ் சினிமாவில் பல்வேறு வேடங்களில் அசத்தியவர் காக்கா ராதாகிருஷ்ணன் என்றும், நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த பெருங்கலைஞர் எனவும் கூறி இருக்கும் அவர், 72 வயதானாலும் கெத்தாக நடிக்கிறார் எனக் கூறும் பருந்து குஞ்சுகளுக்கு இதனை தெரிவிப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவால் ஆத்திரம் அடைந்துள்ள ரஜினி ரசிகர்கள், அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





