நடிகை திரிஷா இப்போதும் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். அவர் தமிழ் சினிமாவுக்குள் வந்து 21 ஆண்டுகள் ஆகிறது. இயக்குநர் அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே படம் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
விஜய் உடன் திரிஷா நடித்த கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி, லியோ போன்ற சில படங்கள் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுத் தந்தது. சியான் விக்ரமுடன் பீமா, சாமி போன்ற படங்களில் நடித்திருந்தார். அந்த படங்களும் மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன.
லியோ படத்தில் வளர்ந்த 2 பிள்ளைகளுக்கு தாயாக நடித்திருந்த திரிஷா, விஜய்க்கு ஒரு காட்சியில் உதட்டு முத்தம் கொடுத்து நடித்தது பயங்கர சர்ச்சையானது. ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத அவர் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜர்பைஜானில் அஜீத்குமாருடன் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இயக்குநர் அமீர் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் நான் முதன்முதலில் இயக்கிய மௌனம் பேசியதே படம்தான் எனக்கு ஒரு இயக்குநர் என்ற அடையாளத்தை கொடுத்தது. அந்த படம் வந்து 21 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள், படத்தில் நடித்த சூர்யா, திரிஷா மற்றும் ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
அதே போல், மௌனம் பேசியதே படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான திரிஷாவும், சமீபத்தில் அதே போல ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். ஆனால் அந்த பதிவில் பலரது பெயரை குறிப்பிட்டிருந்த திரிஷா, தப்பித் தவறி கூட இயக்குநர் அமீர் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் திரிஷாவை அந்த படத்தில் ஹீரோயின் ஆக்கியதே அமீர்தான்.
விஜய், அஜீத் ஆகியோருடன் தொடர்ந்து நடித்துவரும் திரிஷா ஏற்கனவே ஆறு என்ற படத்தில் சூர்யாவுடன் நடித்திருக்கிறார். வரும் காலத்தில் திரிஷாவுக்கு, சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு வரலாம் என்பதால் அவருக்கு பிடிக்காத இயக்குநர் அமீரை தனது பதிவில் குறிப்பிட்டு விடக்கூடாது என, மிக கவனமாக அமீரை குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறார் திரிஷா. குந்தவையோட இந்த குணம் ரொம்ப மோசமானது என பலரும் சோஷியல் மீடியாவில் கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.





