லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தத் திரைப்படம் ரஜினியின் 171 வது திரைப்படமாக உருவாகிறது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு மாஸ்டர்கள் சண்டை பயிற்சியாளர்களாக செயல்படுகின்றனர்.
இந்தப் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தனது முந்தைய படமான லியோவில் பணிகளை ஆரம்பிக்கும் போதே அதற்கான ரிலீஸ் தேதியை அறிவித்த லோகேஷ் இதில் அப்படி செய்ய மாட்டேன் என்று கூறி இருக்கிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் பாணியிலேயே உருவாகும் என்றும், இதற்கு முன் செய்யாத முயற்சியை இதில் எடுக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் கதையை கேட்டதும் ரஜினி தன்னை கட்டிப்பிடித்து பாராட்டியதாக கூறி இருக்கும் லோகேஷ் கனகராஜ், மாதம் தோறும் கதை குறித்து ரஜினி தன்னுடன் விவாதிப்பார் என்றும், கதையில் நடக்கும் மாற்றங்களை அவர் கேட்டறிவார் என்றும் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் எதிர்பாராத வகையில், பல உச்ச நட்சத்திரங்கள் இதில் இடம் பெறுவார்கள் என்றும் லோகேஷ் கூறியிருந்தார்.
இந்த நிலையில் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இது மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சி செய்தாராம்.
ஆனால் அதில் விருப்பமில்லை என ஷாருக்கான் கூறிவிட்டதால், தற்போது ரன்வீர் சிங் அதில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான சூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தலைவர் 171 ருக்கான படப்பிடிப்பில், லோகேஷ் கனகராஜின் நண்பரும் இயக்குனருமான ரத்னவேல் பணியாற்ற மாட்டார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்களில் திரைக்கதை எழுதும் பணியில் லோகேஷ் உடன் இணைந்து ஈடுபட்டார்.
சமீபத்தில் நடைபெற்ற லியோ வெற்றி விழாவில் பேசிய ரத்னவேல், கழுகு எவ்வளவு பசித்தாலும் கீழே வரத்தான் வேண்டும் என்று கூறி இருந்தார். அவர் ரஜினியை தான் மறைமுகமாக பேசியதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படியான சூழலில் தான் ரத்னவேல் இந்த திரைப்படத்தில் இருந்து விலகி இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். அதேசமயம் அவர் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருவதாலேயே, இதிலிருந்து ஒதுங்கி இருப்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.





