தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த லைன் அப்களில் பிஸியாக நடித்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. மகாராஜா தலைவன் தலைவி என கடந்த 2 ஆண்டுகளில் அடுத்தடுத்து வெளியான 2 படங்களுமே பெரிய வெற்றியை பெற்றன. ஆனால் அவர் நடித்த ஏஸ் படம் பெரிய கவனம் பெறவில்லை. இதில் நாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருந்தார்.
இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 மற்றும் டிரெயின் ஆகிய 2 படங்களும் ரிலீஸ்க்கு தயாராக உள்ளன. ஆனால் ஓடிடி வியாபாரம் எதிர்பார்த்த அளவில் இல்லாததால் இந்த படங்களின் ரிலீஸ் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ்க்கு பிறகு இந்த படங்களை ரிலீஸ் செய்தால்தான் போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்கும் என்பதாலும் படத்தின் தயாரிப்பாளர் வெயிட் செய்வதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன்.
நடிகராக அறிமுகமான காலகட்டத்தில் விஜய் சேதுபதிக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியையும் அடையாளத்தையும் கொடுத்தது. அதன் பிறகுதான் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து பெரிய நடிகராக மாறினார். அதன்பிறகு சீதக்காதி என்ற படத்தையும் பாலாஜி தரணிதரன் இயக்கினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணியில் புதிய படம் ஒன்று தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை திரைப்பட இயக்குனர் அட்லி தனது ஏ பார் ஆப்பிள் நிறுவனம் மூலம் சொந்தமாக தயாரிக்கிறார்.. இந்த படம் முந்தைய படங்களை போன்று இதுவும் ஒரு வித்யாசமான ஒரு கதைக்களத்தில் உருவாகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து வந்த நிலையில் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த படம் தான் விஜய் சேதுபதியின் அடுத்த படமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுவரை படத்துக்கு டைட்டில் எதுவும் வைக்கப்படாத சூழலில் தற்போது இந்த படத்துக்கு பக்தா என டைட்டில் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டைட்டில் பக்தா என்பதால், கருப்பு படம் போல இதுவும் பக்தியை மையப்படுத்திய கதையா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.





