குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள வங்க கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இரு பகுதிகளையும் சேர்த்து பல இடங்களில் 50 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக காயல்பட்டினம் பகுதியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 95 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவானது. இதேபோல் ஸ்ரீவைகுண்டம் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு அதி கனமழை பெய்தது. இதேபோல் பாளையங்கோட்டையில் வரலாறு காணாத அளவுக்கு மலைப்பதிவாகியுள்ளது. அங்கு 45 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் நெல்லை மாநகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. ஜங்ஷன், பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ரயில் நிலையம் செல்லும் பாதை 300 சென்டி மீட்டர் உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து இருப்பதால் ஏராளமான மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன.
கனமழைக்கு இதுவரைக்கும் திருநெல்வேலி இரண்டு பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சென்ற ரயில், ஸ்ரீவைகுண்டம் அருகே சிக்கிக்கொள்ள அதிலிருந்து பயணிகள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். இந்த நிலையில் கனமழை பாதிப்பு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது.
ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.





