தமிழ் சினிமாவில் துவக்கத்தில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சீமான். பிறகு அவரும் சில படங்களை இயக்கினார். அவரது இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி, பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி, சத்யராஜ் நடித்த வீரநடை உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். அமைதிப்படை படத்தில் சில காட்சிகளில் சீமான் நடித்திருப்பார்.
ஒரு கட்டத்தில் இயக்குனராக இருந்த சீமான் நடிக்கவும் துவங்கினார். எவனோ ஒருவன், பள்ளிக்கூடம், மாயாண்டி குடும்பத்தார், மிக மிக அவசரம், சட்டப்படி குற்றம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி என்ற படத்திலும் சீமான் விவசாயி கேரக்டரில் நடித்து வருகிறார்.
நடிகர் மற்றும் இயக்குனர் மட்டுமின்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் சீமான் இருந்து வருகிறார். தமிழக அரசியல் களத்தில் சீமானுக்கு மிகப்பெரிய வரவேற்பும், அங்கீகாரமும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்தமுறை நாடாளுமன்ற தேர்தலில், அதிக சதவீத ஓட்டுகளை பெற்றதால், மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாக நாம் தமிழர் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் மற்றும் இயக்குனர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்குச் சென்று, அவரை நேரில் சந்தித்துள்ளார். சீமானின் பையனை கையில் தூக்கி சிவகார்த்திகேயன் கொஞ்சுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், மிக விரைவில் நாம் தமிழர் கட்சியில் இணைந்து விடுவார் என்பது போன்ற தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல. நடிகர் சிவகார்த்திகேயன் அரசியல் சார்ந்த விஷயமாக சீமானை சந்திக்கவில்லை என்பது உறுதியாகி விட்டது. சினிமா தொழில் சம்பந்தமாக 2 நடிகர்களின் சந்திப்பாகவே இந்த நிகழ்வு நடந்துள்ளது.
சிவகார்த்திகேயன் அமரன் மற்றும் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் சிங்கநடை படங்களை தொடர்ந்து, அடுத்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். அதில் முக்கிய கேரக்டரில் சீமான் நடிக்க ஏற்கனவே, படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு சீமானை அழைத்து பேசியுள்ளார். ஆனால் சீமான் போதிய ஆர்வம் அதில் காட்டாததால், படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் சீமான் வீட்டுக்கு நேரில் வந்து, அந்த கேரக்டரில் நீங்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று வலியுறுத்தி, தனது படத்தில் நடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதனால் நிச்சயமாக இந்த படத்தில் சீமான் நடிக்க அதிக வாய்ப்புள்ளது.





