நடிகர் விஜய் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்திருந்தது. திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது.
கேரளாவிலும் இந்த படம் ரிலீஸாகி, ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. கேரளா சினிமா ரசிகர்களை பொருத்தவரை, பொதுவான ரசிகர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே விரும்புவார்கள். நடிகர்களை கலைஞர்களாக மட்டுமே மதிப்பார்கள். அவர்கள் அரசியலுக்கு வந்தால் ஓட்டு போட மாட்டார்கள். தமிழ்நாட்டை போல, நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பழக்கம், கேரளாவில் இல்லை.
இந்த படம் குறித்து, சமீபத்தில் கேரளாவில் நடந்த சர்வதேச புத்தக விழாவில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான சுரேஷ் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். அவரது மகள் கீர்த்தி சுரேஷ் விஜயுடன் பைரவா, சர்கார் என 2 படங்களில் நடித்துள்ள நிலையில், விஜய் நடித்த லியோ படம் குறித்து பேசியிருப்பது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ரசிகர்களின் மைண்ட் செட் மாறிவிட்டது. லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்களை பின்தொடர்கின்றனர். மம்முட்டி நடித்த ரோமாஞ்சனம் படம் கூட சிறந்த படமாக எனக்கு தோன்றவில்லை. எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் ரசிகர்களுக்கு பிடிக்கிறது. இதற்கு நான் பழைய ஆள் என்பது காரணமாக இருக்கலாம்.
கேரளாவிலும் தமிழ் சினிமாவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் லியோ படம் பார்த்தேன். எனக்கு அது ஒரு பெரிய சிறந்த படமாக தோன்றவில்லை. அதில் கிளைமேக்ஸில் 200 பேரை ஹீரோ அடிக்கிறதெல்லாம் சூப்பர் மேன் தான் பண்ண முடியும். ஆனால் அதுதான் உங்களுக்கு பிடித்திருக்கிறது என சுரேஷ் ஆதங்கமாக பேசியிருக்கிறார்.
மலையாளத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளராக உள்ள சுரேஷ், இப்படி லியோ படத்தை விமர்சித்து பேசியிருப்பதை விஜய் ரசிகர்கள் கண்டித்துள்ளனர். அவரது மகள் கீர்த்தி சுரேஷ் சர்கார், பைரவா படங்களில் நடித்திருந்தார். அப்போது அந்த படங்களை பற்றி விமர்சிக்காமல் லியோ குறித்து ஏன் பேசுகிறார் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் ஒரு தரப்பினர், அவர் பேசியது உண்மைதான். லியோ கிளைமேக்ஸ் பைட் செம காமெடியா தான் இருந்தது என்றும் பதிலுக்கு கலாய்த்து வருகின்றனர்.





