விஜய் 68 படத்தில், நடிகர் விஜய் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில், இந்த படத்திலும் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. சிநேகா, லைலா, மீனாட்சி செளத்திரி, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், வைபவ், அஜய் அஜ்மல், பிரேம்ஜி என பலர் நடிக்கின்றனர்.
லியோ படத்தை போலவே, இதிலும் நிறைய கேரக்டர்கள் இருந்தாலும் இதுவும் ஒரு ஆக்சன் படம்தான் என்பதில் மாற்றுத் கருத்து இல்லை. சூப்பர் சுப்பராயன் மகன் திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் மாஸ்டராக சண்டை காட்சிகளை, விறுவிறுப்பாக எடுத்து வருகிறார். தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் ஷூட்டிங்கில் சண்டை காட்சிகள் தான் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
விஜய் இந்த படத்தில் பிஸியாக இருந்தாலும், லியோ பற்றிய சர்ச்சைகளும், விமர்சனங்களும், தகவல்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்போது புதிதாக ஒரு விஷயம் டிரண்டிங் ஆக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதாவது, லியோ படத்தின் இன்றைய வசூல் நிலவரம் என்ன, அது மற்ற படங்களுடன் ஒப்பிடுகையில் சாதனையா, அதையும் கடந்த நிலையில் உள்ளதா என்பதே.
இதில் ஜெயிலர் படத்துடன் ஒப்பிட்டு, லியோ அந்த வசூலை முறியடித்து விட்டதா, லோகேஷ் கனகராஜின் விக்ரம் பட வசூலை கடந்து விட்டதா, இதுவரை வசூலில் என்னென்ன சாதனைகளை லியோ கடந்திருக்கிறது என, பலதரப்பட்ட அலசல்களுடன் சோஷியல் மீடியாவில் தினமும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், தியேட்டரில் கூட்டம் குவிகிறது. குடும்பம் குடும்பமாக மக்கள் படம் பார்க்க வருகின்றனர். லியோ படம், 400 கோடிகளை கடந்துவிட்டது, 500 கோடிகளை நெருங்கிவிட்டது என தகவல்கள் வைரலாகி வருகின்றன. ஆனால், உண்மையில் பல தியேட்டர்களில் ஆபரேட்டருடன் சேர்த்து, மேனேஜர், தியேட்டர் ஊழியர்கள் உட்பட 100 பேர் கூட படம் பார்ப்பது இல்லையாம்.
இதற்கிடையே நடிகர் விஜய், லியோ படத் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் ஒவ்வொரு நாளும், மணிக்கு ஒரு தரம் லியோ வசூல் நிலவரம் குறித்த அப்டேட் எல்லாம் செய்ய வேண்டாம். வாரம் ஒருமுறை என்ன வசூல் நிலவரமோ, அதை மட்டும் அதிகாரபூர்வமாக அறிவியுங்கள். அடிக்கடியோ, தினமுமோ கூற வேண்டாம் என கண்டிஷனாக கூறி இருக்கிறார். அவர் பல படங்களில் நடித்த ‘அனுபவசாலி’யாச்சே? தினமும் வசூல் அப்டேட் சொன்னா, தியேட்டர்கள் காத்து வாங்கற விஷயம் அம்பலமாகி விடுமே என்று அவருக்கு தெரியாதா என்ன? என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.





