இன்றைய தமிழ் சினிமாவில் சில முன்னணி இயக்குனர்கள் வருடக்கணக்கில் படம் எடுக்கிறார்கள். ஒரு படத்தை ஆரம்பித்து முடிக்க 2 ஆண்டுகள் வரை கூட கால அவகாசம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் 2 மணி நேர படத்தை 8 மணி நேரமாக எடுத்துவிட்டு பிறகு அதை குறைக்க முடியாமல் 2ம் பாகம் 3ம் பாகம் என்று கதையை சொதப்பி தயாரிப்பாளருக்கு பலநூறு கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர். அது மட்டும் இன்றி எடுக்கப்பட்ட முக்கியமான காட்சிகளை எல்லாம் வெட்டி தூர வீசி விடுகின்றனர்.
பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளை முக்கிய காட்சிகளை இப்படி ரசிகர்களின் பார்வைக்கு தெரியாமல் வீணடிப்பது சில இயக்குனர்களின் வழக்கமாக உள்ளது. இது தயாரிப்பாளர்களுக்கு மட்டுமின்றி திரைப்பட தொழிலாளர்களின் கடும் உழைப்பை வீணடிக்கும் ஒரு தகாத செயலாகவும் உள்ளது.
ஆனால் கே எஸ் ரவிக்குமார் போன்ற சில இயக்குனர்கள் மிகக் குறைந்த நாட்களில் சிறந்த திரைப்படங்களை இயக்கி தந்து ரசிகர்களை மகிழ்வித்தனர்.
அது மட்டுமின்றி தயாரிப்பாளர்களுக்கும் பெரிய லாபத்தை சம்பாதித்து கொடுத்தனர். அதனால்தான் இன்றும் அவர்கள் சினிமாவில் நிலைத்து நிற்கின்றனர். தயாரிப்பாளர்களின் மனம் கவர்ந்த இயக்குனர்களாக வலம் வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் சேரன் கூறியதாவது, இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய நாட்டாமை படத்தில் நான் உதவி இயக்குனராக இருந்தேன். நாட்டாமை படத்தில் நான் வேலை பார்க்கிற போது அதில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அந்த காலகட்டத்தில் டூயல் ரோல் எடுப்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை.
மிட்செல் கேமரா வைக்கணும். பிளேஸ்மண்ட் மார்க் பண்ணனும். ஒரு ரோல் நடிச்சிட்டு இன்னொரு ரோல் நடிக்க டைம் எடுக்கணும். இவ்வளவு இருக்கும். சாதாரணமா மிட்செல் கேமராவில் டபுள் ஆக்ட் பண்ற படங்கள் 80 நாட்கள் 90 நாட்கள் ஷூட் பண்றதுக்கு ஆகும். ஆனால் கேஎஸ் ரவிக்குமார் 52 நாட்களில் நாங்கள் முடித்து விட்டோம்.
புரியாத புதிர் படம் வந்து 23 நாட்களில் எடுத்து முடித்துவிட்டோம். சேரன் பாண்டியன் படம் வந்து 32 நாட்கள். இதுக்கு காரணம் என்னவென்றால் அவ்வளவு வேகமாக பணி செய்தோம். டைரக்டர் வந்து கிளீனா உட்கார்ந்து ஷெ்டயூல்ல இருந்து என்ன வேணும் என்பதை பிளான் போட்டு கொடுத்துடுவார் என்று இயக்குனர் சேரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





