விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 இப்போது நடந்து வருகிறது. ஏறக்குறைய 80 நாட்களை நெருங்கிவிட்ட இந்த நிகழ்ச்சியில், குறிப்பிட்ட சிலர் மட்டுமே இன்னும் மீதம் இருக்கின்றனர். வரும் நாட்களில் அவர்களில் சிலர் வெளியேற்றப்பட்டால், இறுதியில் டைட்டில் வின்னர் அறிவிக்கப்படுவார். கடந்த முறை பிக்பாஸ் வின்னராக அசீம் வெற்றி பெற்றார். நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.
இந்தமுறை பங்கேற்றவர்களில் அதிக கவனம் ஈர்த்தவர் பிரதீப் ஆண்டனி. நிச்சயம் இறுதி வரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவரை சில வாரங்களிலேயே ரெட்கார்டு கொடுத்து கமல்ஹாசன் வெளியே அனுப்பினார். இது பிக்பாஸ் பார்வையாளர்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் கடும் விமர்சனத்துக்கு ஆளானவர் கமல்ஹாசன்தான்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களிடையே அடிக்கடி டாஸ்க் நடத்தப்படும். அந்த போட்டிகளை காண விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் பலரும் துவக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தினமும் தவறாமல் பார்த்தனர். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு, குழாயடி சண்டையாக மாறி, பிக்பாஸ் வீடு காசிமேடு மீன் மார்க்கெட் போல கூச்சல், குழப்பம் மிகுந்த பகுதியாக மாறிவிட்டது.
அதுவும் இந்த பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் வீட்டுக்குள் பேசும் விதமும், அநாகரிகமாக நடந்துக்கொள்வதும் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது. அதுவும் தரம்கெட்ட வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்வது பிக்பாஸ் நிகழ்ச்சியின் தரத்தையே கேள்விக்குறியாக்குகிறது. டிஆர்பி ரேட்டிங் உயர்வுக்காக இதுமாதிரி விஷயங்களை விஜய்டிவி அனுமதிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு தினசரி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அவர்கள் இருக்கும் நாட்களை பொறுத்து முடிவில் அவர்கள் வெளியேறிய பிறகு சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் பிரபலம், மக்கள் மத்தியில் செல்வாக்கு அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. டிஆர்பி ரேட்டிங் உயர்த்தினாலும் சம்பளம் உயர வாய்ப்புள்ளது.
அதன்படி பிக்பாஸ் வீட்டுக்குள் முக்கிய போட்டியாளராக இருக்கும் நடிகை விசித்ராவுக்கு ஒருநாள் சம்பளம் ரூ. 40 ஆயிரம் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதுபோல் பிரச்னைகளின் ஆணிவேராக கூறப்படும் மாயாவின் சம்பளம் தினமும் ரூ. 25 ஆயிரம் என்றும், ரவீணா சம்பளம் ரூ. 15 ஆயிரம் என்றும் கூறப்படுகிறது. மற்றவர்களின் சம்பளம் ரூ. 10 ஆயிரம் முதல், ரூ. 20 ஆயிரம் வரை உள்ளதாக கூறப்படுகிறது.





