இன்று தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு உச்சத்தில் இருக்கிறார். அவர் நடித்த படங்கள் மிக மோசமான கதையம்சத்தில் சொதப்பலாக இருக்கிறது என விமர்சிக்கப்பட்டாலும் விஜய் நடித்த படம் என்ற ஒரே காரணத்துக்காக ஸ்டார் வேல்யூ என்ற முறையில் மிகப்பெரிய வசூலை குவிக்கும். அதற்கு உதாரணம், லியோ தான்.
சில நடிகர்களின் படங்கள் தோல்வியடைந்தால் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். ஆனால் சில நடிகர்கள் படங்கள் தோல்வியடைந்தாலும் அந்த படங்களை தயாரித்தவர்களுக்கு லாபத்தில் குறையுமே தவிர, முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முடியாத அளவுக்கு நஷ்டம் வராது. அந்த சில நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் மட்டுமே.
தமிழ் சினிமாவில் துவக்கத்தில் விஜய் படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. விஜயகாந்துக்கு தம்பியாக விஜய் நடித்த செந்தூரப்பாண்டி ரசிகர்களின் மத்தியில் நல்ல அறிமுகத்தை விஜய்க்கு கொடுத்தது. அடுத்த ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே, மாண்புமிகு மாணவன் போன்ற படங்கள் அவரை சராசரியான ஆக்சன் ஹீரோவாக மட்டுமே காட்டியது.
இந்த சூழலில் ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த படம்தான் பூவே உனக்காக. இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்த படம்தான் விஜய்க்கு, அவரது சினிமா பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில்தான் அவர் ஒரு காதல் நாயகனாக, சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்துக்கு பிறகுதான் மலையாளப்பட இயக்குநர் பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை படம் வெளியானது. இந்த 2 படங்களும்தான் விஜயை வேற லெவல் ஹீரோவாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது. பூவே உனக்காக படம் தந்த மாஸ் ஹிட்டும், காதலுக்கு மரியாதை தந்த வெற்றியும், விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக மாற்றியது.
ஆனால் பூவே உனக்காக படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நடிகர் முரளிதான். ஆனால் அப்போது வேறு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்ததால், அந்த கதையில் விஜய் தேர்வு செய்யப்பட்டு நடித்திருக்கிறார். எனினும் முரளியை அந்த படத்தில் மச்சினிச்சி வந்த நேரம் மண் மணக்குது என்ற சிறப்பு பாடல் காட்சியில் நடிக்க வைத்தார் இயக்குநர் விக்ரமன். முரளி நடிக்க வேண்டிய படத்தில், விஜய் நடித்தது ஏதேச்சையாக நடந்திருந்தாலும் அந்த படம்தான் விஜய்க்கு ஏணியாக இருந்து சினிமாவில் உயரத்துக்கு செல்ல உதவியது.





