தமிழ் திரை உலகத்தை போலவே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களையும், பெரிய வர்த்தகத்தையும் கொண்டிருப்பது தெலுங்கு சினிமா. தற்போது அங்கு நாதமுனி பாலகிருஷ்ணாவில் தொடங்கி சிரஞ்சீவி, நாகார்ஜூன், பவன் கல்யாண், ரவி தேஜா, என் டி ஆர், பிரபாஸ், அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, ராம்சரண், நானி என ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கின்றனர்.
இவர்களில் ஒருவராக இணைந்தவர் தான் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. ஹைதராபாத்தை சேர்ந்த இவர் ஆரம்ப முதலே தனது துருதுருப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை சம்பாதித்து வைத்தார். 2011 ஆம் ஆண்டு அவர் திரை உலகிற்கு அறிமுகமானாலும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவரது பெயர் மிகப்பெரிய அளவில் வெளியே தெரிய ஆரம்பித்தது.
அதற்கு மிக முக்கிய காரணம் அர்ஜுன் ரெட்டி திரைப்படம். காதல் தோல்வியால் விரக்தியில் இருக்கும் இளைஞர், மது போதைக்கு அடிமையாகி என்னவெல்லாம் ஆத்திரத்தில் செய்கிறார் என்பதை கருவாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. முழுக்க முழுக்க போதையை மையப்படுத்தியும், ஒரு இளைஞனின் ஆத்திரத்தையும் எடுக்கப்பட்டு முகம் சுளிக்கும் வகையில் இதன் கதை இருந்தாலும், அதனை இளைஞர்கள் கொண்டாடினர்.
தெலுங்கு திரை உலகத்தையும் தாண்டி, பிற மாநிலங்களிலும் மிகப்பெரிய வரவேற்பை அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் இந்த திரைப்படத்திற்கு பலரும் வரவேற்பு தந்தனர். பிற்காலத்தில் இதே திரைப்படம் இங்கு ரீமேக் செய்து எடுக்கப்பட்டாலும், விஜய் தேவரகொண்டாவின் அந்த கதாபாத்திரம் மிகவும் நன்றாக இருந்ததாக பலரும் கூறி வந்தனர்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு, அடுத்த திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் கீதா கோவிந்தம். குஷி திரைப்படம் பாணியில் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. அதுவும் அந்த இன்கம் இன்கம் காவாலே பாடல் பலரையும் முணுமுணுக்க வைத்ததால், அந்த திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த நிலையில் அந்தப் படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலிப்பதாக ஒரு தகவல் வெளியானது.
இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை தற்போது, விஜய் தேவரகொண்டா முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஊடகங்கள் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற செய்திகள் மூலம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தப்படுவதாகவும் அவர் விரக்தியுடன் தெரிவித்து இருக்கிறார்.





