லியோ படத்தை அடுத்து, நடிகர் விஜய் இப்போது இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் 2 ரோல்களில் நடிக்கிறார். சிநேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா ஷர்மா, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ் என ஒரு நட்சத்திர கூட்டமே இந்த படத்தில் நடித்து வருகிறது.
சென்னை பிரசாத் ஸ்டுடியோ, கோகுலம் ஸ்டுடியோ தொடர்ந்து ஐதராபாத், துருக்கி உள்ளிட்ட இடங்களில் கோட் படப்பிடிப்பு நடந்த நிலையில், அடுத்து இலங்கையில் கோட் படத்தின் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வெங்கட்பிரபு இப்போது இலங்கையில் முகாமிட்டுள்ளார். சில தினங்களில் நடிகர் விஜய் இலங்கை செல்ல உள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தில் துவக்கத்தில், வெங்கட்பிரபுவின் தம்பியான பிரேம்ஜியை, நீ இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் நேரடியாக சொன்னதாக ஒரு பேட்டியில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி கூறியிருந்தனர். அதனால் கோட் படத்தில் பிரேம்ஜி நடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.
ஆனால் சொந்த அண்ணன் டைரக்ட் செய்யும் படத்தில், சொந்த தம்பிக்கு நடிக்க வாய்ப்பு தராமல் தவிர்க்க முடியுமா என்ற நிலையில், விஜய் விளையாட்டாக தான் சொல்லி இருக்கிறார் என தெரிய வந்தது. கோட் படத்தில் பிரேம்ஜியும் நடிக்கிறார். இந்த படத்தில் காமெடி கேரக்டரில் விடிவி கணேஷ் நடிக்கிறார்.
இந்நிலையில், புத்தாண்டு பதிவாக வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டில் நான் திருமணம் செய்து கொள்கிறேன், டாட் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதாவது 40 வயதுகளை கடந்த நிலையில், இன்னும் பிரேம்ஜி திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்.
இப்போது தனது புத்தாண்டு பதிவில், இந்த ஆண்டு நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் என அவர் பகிரங்கமாக தெரிவித்து உள்ளதால், பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட்டார்களா அல்லது ஏற்கனவே காதலித்து பெண் எதுவும் திருமணத்துக்கு தயாராக உள்ளாரா என ரசிகர்கள் பலரும், பிரேம்ஜிக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.





