தமிழ் சினிமாவில் நடந்த 1992ம் ஆண்டில் வெளியான செம்பருத்தி என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரோஜா. இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. ஆந்திராவைச் சேர்ந்த இவரை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்து அவருக்கு ரோஜா என்று பெயர் மாற்றி செம்பருத்தி படத்தில் நடிக்க வைத்தவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. செம்பருத்தி படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததால் ரோஜாவுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகமும் வரவேற்பும் கிடைத்தது.
அதனால் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிகை ரோஜா நடித்தார். அன்றைய முன்னணி நட்சத்திர ஹீரோக்களுக்கு பல படங்களில் ரோஜா ஜோடியாக நடித்தார். மேலும் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் பல நட்சத்திர ஹீரோக்களுக்கு கதாநாயகியாக ரோஜா நடித்தார்.
அவர் நடிக்க வந்த 8 ஆண்டுகளில் 100 படங்களுக்கு மேல் நடிகை ரோஜா நடித்து சாதனை புரிந்தார். கடந்த 2000ம் ஆண்டில் வெளிவந்த பொட்டு அம்மன் நடிகை ரோஜாவின் 100வது படம் ஆகும். 8 ஆண்டுகளில் 100 படங்களில் நடித்ததற்காக அந்த காலகட்டத்தில் அவருக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. 2002ம் ஆண்டில் இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை ரோஜா அதற்குப் பிறகும் கூட சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார்.
ஆனாலும் அவர் ஒரு கட்டத்தில் அரசியல் ஆர்வம் காரணமாக ஆந்திரா அரசியலில் குதித்தார். அவரது அரசியல் பயணம் சினிமாவில் நடிக்க இடையூறாக இருந்ததால் சினிமாவில் நடிப்பது வெகுவாக குறைந்தது. கடந்த 1998ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் நடிகை ரோஜா இணைந்தார். பின்னர் 2008ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பிறகு 2011ம் ஆண்டில் அந்த கட்சியில் இருந்து விலகி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
இப்போது வரை அந்த கட்சியில் தான் நடிகை ரோஜா இருந்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டில் நடந்த ஆந்திரா சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் நடிகை ரோஜா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் இருந்தார். பிறகு 2025ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தார். அதன்பிறகு மீண்டும் சினிமா மீது அவரது கவனம் திரும்பியுள்ளது. கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக ரோஜா இருந்து வருகிறார்.
நடிகை ரோஜா தமிழில் கடைசியாக 2015ம் ஆண்டில் வெளிவந்த என் வழி தனி வழி என்ற படத்தில் நடித்திருந்தார். சுமார் 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அவர் அம்மா கதாபாத்திரத்தில் அன்பே டயானா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் இன்று வெளியாகியுள்ளது. அடுத்து ரோஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள லெனின் பாண்டியன் என்ற படமும் வெளிவர உள்ளது. மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை ரோஜா மீண்டும் ஒரு ரவுண்டு வருவாரா என்று பார்க்கலாம்.





