தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த சங்கத்தின் தேர்தல் அலுவலர் உமாசங்கர் பாபுவின் செயல்பாடுகள் நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளதாக திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி குற்றம் சாட்டியிருக்கிறார். அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் ஒரு ஜனநாயக திருவிழாவாக இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் அதிகாரி உமாசங்கர் பாபுவின் செயல்பாடுகள் தேர்தலின் நம்பகத்தன்மையையும் உறுப்பினர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் கடுமையான கேள்விக்குறியாக்கியுள்ளன.
என் சந்தா நிலுவையில் இருந்தபோது வேட்பாளர் கேபிபி நவீன் என் சார்பாக அந்த தொகையை செலுத்தினார். அவர் என் 30 ஆண்டுகால நண்பர். என் திரைப்படங்களில் நடித்தவர். அசோசியேட்டாக வேலை செய்தவர். அதற்காக சொன்னார். சரி நீங்கள் கட்டி விடுங்கள். நான் வந்து விடுகிறேன் என்றேன். அதற்கான தொகையை நான் அவரிடம் உடனடியாக வழங்கி விட்டேன்.
இது எங்களின் தனிப்பட்ட புரிதல் மற்றும் உரிமை. ஆனால் இந்த சந்தாவை செல்லாது என்று கூறி என் அனுமதியின்றி அந்தத் தொகையை தன்னிச்சையாக நலநிதிக்கு மாற்றி விடுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. எந்த விதியின் கீழ் ஒரு உறுப்பினர் செலுத்தும் சந்தா பணத்தை அந்த உறுப்பினரின் அனுமதியின்றி தேர்தல் அதிகாரி இப்படி தன்னிச்சையாக திசை திருப்ப முடியும்?
இது வாக்களிக்கும் உரிமையை திட்டமிட்டு பறிக்கும் ஒரு செயல். இந்த தேர்தல் நடைமுறைகளில் தேவையற்ற அரசியல் அத்துமீறல்கள் இருப்பதாக பல உறுப்பினர்கள் கருதுகின்றனர். எழுத்தாளர் சங்கம் என்பது தனிப்பட்ட நபர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் இடம் அல்ல. அது கலைஞர்களின் ஜனநாயக அமைப்பு. எனவே தேர்தலை சுமூகமாகவும் நேர்மையாகவும் நடத்த தற்போதைய தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும்.
சங்கங்களின் பதிவுத்துறை இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். மூத்தவர்கள் பாக்யராஜ் போன்றவர்கள் வழிநடத்திய எழுத்தாளர் சங்கத்தின் கண்ணியத்தை காக்க வேண்டிய தருணம் இது என்று இயக்குனர் சீனு ராமசாமி கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





