தேமுதிக தலைவர், நடிகர் கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். முதல் நாள் கோயம்பேடு தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திலும், மறுநாள் சென்னை தீவுத்திடலிலும் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பல லட்சக்கணக்கான ரசிகர்கள், அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவுக்காக மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஒரு கட்சி தலைவராகவும், நடிகராகவும் மட்டுமின்றி அவரது சிறந்த குணம், பண்புகளை நினைத்தே பலரும் கண்ணீர் வடித்தனர்.
ஏனெனில் சினிமா, அரசியல் இரண்டிலுமே விஜயகாந்தின் முக்கிய நோக்கமாக இருந்தது வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும், உணவளிக்க வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. எம்ஜிஆருக்கு பிறகு, தன்னை சந்திப்பவர்களை எல்லாம், சாப்பிட்டீங்களா என கேட்கும் பண்பு கொண்ட மனிதராக விஜயகாந்த் இருந்தார்.
அவரது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஏழெட்டு ஆண்டுகளாகவே அவரால் முன்புபோல செயல்பட முடியவில்லை. நாளுக்கு நாள் அவரது உடல் அசைவுகள் குறைந்து, பேசும் தன்மை இழந்து, நினைவாற்றல் குறைந்து மோசமான நிலைக்கே சென்றார். அதுவும் கடந்த மாதத்தில் தேமுதிக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் அழைத்து வரப்பட்ட நோயாளியாக இருந்த கேப்டனை பார்த்து, பலரும் மனதால் நொறுங்கிப் போய்விட்டனர்.
கேப்டன் இறந்த போது நேரில் வராத நடிகர், நடிகையர் பலரும், இப்போது அவரது நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கார்த்தி, சிவக்குமார், சூர்யா, சசிக்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண்விஜய் என தொடர்ந்து பலரும் நேரில் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுது செல்கின்றனர். தேமுதிக கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் தொடர்ந்து தினமும் வந்தபடி உள்ளனர்.
இந்நிலையில் விஜய் டிவி குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் புகழ், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்பு, செய்தியாளர்களின் பேசிய அவர், கேப்டனின் சார்பாக கேகே நகரில் உள்ள எனது அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு நான் சாப்பாடு போடுவேன் எனத் தெரிவித்தார். இந்த விஷயத்தை பலரும் பாராட்டி, புகழுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.





