நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இந்த படத்தில் தனுஷ் அப்பா, மகன் கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது.
கேப்டன் மில்லர் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ், இதுவரை தயாரித்த படங்கள் எதுவுமே சென்சார் போர்டு தரப்பில் ஏ சான்றிதழ் பெறவில்லை. இந்நிலையில், இது ஏ படம் என்றால் தங்களது தயாரிப்பு நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படும் என கேட்டுக் கொண்டதால், கிளமைாக்சில் 4 நிமிட காட்சிகளை நீக்குமாறு சென்சார் போர்டு வலியுறுத்தியது. அதன்பின் அதை நீக்கியதால் இதற்கு யுஏ சான்று கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் மில்லர் படத்தின் பிரமோ நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் தனுஷ், சிவராஜ்குமார், படத்தின் நாயகி பிரியங்கா மோகன், டைரக்டர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். இந்த பட விழாவில் பேசிய சிவராஜ்குமார், நடிகை தனுஷை மனம் திறந்து வெளிப்படையாக பாராட்டியது, விழாவில் திரளாக பங்கேற்ற தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
கேப்டன் மில்லர் விழாவில் பேசிய நடிகர் சிவராஜ்குமார், தனுஷ் படங்களை நான் மிகவும் விரும்பி பார்ப்பவன். அவரது படங்களில் நிறைய போராட்டங்களை தாண்டி அவர் வெற்றி பெறுவார். அவர் அசைவம் சாப்பிட மாட்டார். அதனால், என் மனைவி செய்த சாம்பாரை மிகவும் விரும்பி சாப்பிடுவார், என்று குறிப்பிட்டு பேசினார்.
தமிழ் சினிமாவில் சாம்பார் நடிகர் என்றே ஒரு பட்டப்பெயர் மறைந்த மூத்த நடிகர் ஜெமினி கணேசனுக்கு உண்டு. ஏனெனில், படப்பிடிப்பு தளத்தில் அவர் சாம்பார் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவாராம். சில நேரங்களில் பெரிய கிண்ணங்களில் சாம்பாரை ஊற்றி, ஊற்றி குடிப்பதும் அவரது வழக்கமாக இருந்திருக்கிறது. இதனால் அவரது படத்துக்கு செல்லும் ரசிகர்களை, சிலர் கிண்டலாக என்ன சாம்பார் நடித்த படத்துக்கு போறியா என்பார்களாம்.
இப்போது நடிகர் தனுஷூம் சாம்பாரை விரும்பி சாப்பிடுபவராக மாறிவிட்டார். அசைவம் சாப்பிடுவதை கைவிட்டுவிட்டு சைவத்துக்கு மாறிவிட்டார் என்பதை சிவராஜ்குமார் வெளிப்படையாக கூறிவிட்டார். நடிகர் அஜீத்குமாரும் அசைவத்தை விட்டுவிட்டு சைவத்துக்கு சமீபத்தில் மாறிவிட்டதாக கூறப்படுகிறது. ஆக அஜீத் பாணியில் தனுஷூம் உணவு பழக்கத்தை மேற்கொள்ள துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.





