இசையை தெய்வமாக வழிபடலாம் என்பதில் தவறில்லை. ஏனெனில் மனிதனை நோயில் இருந்தும், மனப்புழுக்கத்தில் இருந்தும் காப்பாற்றும் வலிமை நல்ல இசைக்கு உண்டு. இசை கேட்டால், ரத்த அழுத்தம் வெகுவாக குறைவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
சில இசை மனிதர்களை துள்ளி எழுந்து ஆட்டம் போட வைக்கிறது. சில இசை அமைதியான மனம் இலகுவாகி தூங்கவும் செய்கிறது. இசைக்கு உருவமில்லை என்றாலும், அந்த ஒலிக்கு பலவிதமான ஸ்வரங்கள் உண்டு. அதனால்தான் காற்றை ஒலியாக்கி, அந்த ஒலியை இசையாக்கி தரும் இளையராஜாவை, இசைஞானி என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.
ஒரு தனிப்பட்ட மனிதராக இளையராஜா மீது பல விமர்சனங்கள் உண்டு. கர்வமாக நடந்துக்கொள்வார். அடுத்தவர்களை எடுத்தெறிந்து பேசுவார். யாரையும் விரைவில் அலட்சியப்படுத்துவார். சில நேரங்களில் சர்ச்சையான விஷயங்களை பேசி, விமர்சனங்களிலும் சிக்கிக்கொள்வது அவரது வழக்கம்தான். ஆனால் இசைக்கலைஞராக அவரது திறமையை, ஆற்றலை யாருமே குறை சொல்ல முடியாது.
நாள் கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் கேட்கிற அவரது பாடல்கள் எப்போதும் சலிக்காது. இன்னும் அவரது இசை ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டுதான் இருக்கிறது. இளையராஜா இசை, வைரமுத்து வரிகள், கேஜேஜேசுதாஸ் குரல் என்றால், பித்துப்பிடித்து போன இசை ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.
கல்கி எழுதிய மிக சிறப்புமிக்க கதையான பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். முதல் பாகம் வரவேற்பை பெற்ற நிலையில், 2ம் பாகத்தின் கிளைமேக்ஸை மாற்றி, சொதப்பி இருந்தார் மணிரத்னம்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் படம் குறித்து பேசிய இளையராஜா, பொன்னியின் செல்வன் நாவலை எத்தனை முறை படித்தேன் என்று எனக்கே தெரியாது. நான், பாரதிராஜா, பாஸ்கர் என மூன்று பேரும் போட்டி போட்டுக்கொண்டு படிப்போம். பொன்னியின் செல்வன் படத்தில் அந்த ஒரிஜினல் பீல் கொஞ்சம் கூட இல்லை. அந்த நாவலை நன்றாக படித்தவர்களுக்கு அது நன்றாக புரியும், என்று கூறியுள்ளார் இளையராஜா.





