தமிழக அரசியல் வரலாற்றில் தேமுதிக என்ற அரசியல் கட்சியை துவங்கி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் விஜயகாந்த். கடந்த 2005ம் ஆண்டில் அவர் தமிழக அரசியல் களத்தில் குதித்த போது அவருக்கு கிடைத்த மக்களின் வரவேற்பும், செல்வாக்கும் தேர்தல் காலத்தில் அவருக்கு மக்கள் ஆதரவு தந்து போட்ட ஓட்டுக்களின் சதவீதமும் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளை மிரண்டு போக செய்தது.
பல ஆண்டுகளாக தமிழகத்தில் அரசியல் நடத்திய கட்சிகள், சொற்ப எண்ணிக்கையில் தொகுதிகளில் ஓட்டுகளை வாங்கிய நிலையில், தேமுதிக வாங்கிய ஓட்டுக்கள் பல மடங்கு கணிசமாக இருந்ததால் மற்ற அரசியல் கட்சிகள் அரண்டு போய்விட்டன.
அதேபோல் விஜயகாந்த் தேமுதிக கட்சி துவங்கி, அவர் சந்தித்த இரண்டாவது சட்டசபை தேர்தலிலேயே திமுகவை பின்னுக்கு தள்ளி, தேமுதிக இரண்டாமிடம் பிடித்தது. அதிமுக ஆட்சிக்களத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் சட்டசபையில் அமர்ந்தார் என்பது பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் இப்போது தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் இறங்கி இருப்பது திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் பெரிய அளவில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எந்த நடிகர் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவை அசைக்க முடியாது என்று திமுக அமைச்சர்கள் மேடையில் பேசி வந்தாலும், மக்கள் செல்வாக்கு என்ற முறையில் விஜய்க்கு கிடைத்துவரும் ஆதரவு அவர்களுக்கு ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் நடிகர் விஜய் மாநாடு நடத்தி அதில் தனது கொள்கை கோட்பாடுகள் எதிர்கால திட்டங்கள் குறித்து தெரிவித்தால் அது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று விடும் என்பதால், மாநாடு நடத்த விடாமல் தொடர்ந்து நிபந்தனைகளை போட்டு விஜய்க்கு நெருக்கடியை தருவதாக ஆளுங்கட்சி திமுக மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்போதே முதுமை காரணமாக, பொது இடங்களுக்கு வந்து செல்லவும், அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளவும் சிரமப்படுகிறார். அதே நேரத்தில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் பம்பரமாக சுழன்று வருகிறார். எனவே 2026 சட்டசபை தேர்தலில் விஜய்க்கு எதிர் களத்தில் நிற்கப் போவது ஸ்டாலினாக இருந்தாலும், உண்மையான போட்டி விஜய்க்கும் உதயநிதிக்கும் என்று அரசியல் வட்டார விமர்சகர்கள் பேச துவங்கியிருக்கின்றனர்.





