தமிழ் சினிமாவில் கம்பீரமான ஒரு நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக சிறந்த நிர்வாகியாக செயல்பட்டவர். அவரது மறைவு தமிழக மக்களிடையே பலத்த வேதனையை தந்தது. இன்னும் தேமுதிகவினர் அந்த பாதிப்பில் இருந்து மீளவில்லை.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்தப்படியாக இருந்த விஜயகாந்த் கேப்டன் சினி கிரியேசன்ஸ், ராவுத்தர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு, நடிகர்களுக்கு வாய்ப்பளித்தவர் விஜயகாந்த். அவரால் திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலரும் இயக்குநர்களாகி வெற்றி பெற்றனர்.
அதுமட்டுமின்றி சென்னை தியாகராய நகரில் இருந்த ரோகிணி லாட்ஜில் புதுமுக இயக்குநர்கள், நடிகர்கள் என யார் சென்றாலும் சாப்பிட்டுக்கொள்ளும் ஒரு ஏற்பாட்டை 1980, 90களில் அந்த காலத்திலேயே கேப்டன் செய்திருந்தார். அதேபோல் படப்பிடிப்பு தளங்களில் அனைவருக்கும் ஒரே விதமான சாப்பாடு, அதுவும் தரமான சாப்பாடு என்பதுதான் விஜயகாந்தின் அன்பு கட்டளை.
அதற்காக கூடுதல் செலவு ஏற்படும் என்று தயங்கும் பட்சத்தில் தயாரிப்பாளருக்கு தன்னுடைய சம்பளத்தில் ஒரு பெரும்பகுதியை விட்டுக்கொடுத்து, அந்த உணவு செலவுகளை இதில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான் கேப்டனின் வழக்கம். அதனால் கேப்டன் ஷூட்டிங் என்றாலே தினமும் கறி சோறுதான் என படக்குழுவினர், ஊழியர்கள் சந்தோஷமாக கலந்துக்கொள்வர்.
அப்படிப்பட்ட உயர்ந்த மனம் கொண்ட விஜயகாந்த் மறைவுக்கு பல நடிகர்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. சிலர், வெளிநாட்டில் இருப்பதாக கூறி, தங்களால் வர முடியாத நிலைக்கு ஒரு காரணம் சொல்லிக்கொண்டனர். அதிலும், சிவகார்த்திகேயன் சென்னையில் இருந்தும் அப்போது வரவே இல்லை.
நேற்று, தனது மனைவியுடன் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்குச் சென்ற சிவகார்த்திகேயன், அங்கு இருந்த விஜயகாந்த் உருவ படத்திற்கு மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார். இந்த புகைப்படத்தை பதிவிட்ட ப்ளூ சட்டை மாறன், ஒரு வார காலமாக சென்னையில் இருந்த சிவகார்த்திகேயன், இன்று சென்னை திரும்பினார், என நக்கலாக பதிவிட்டு சென்னையில் இருந்துக்கொண்டே, இன்றுதான் வந்திருக்கிறார் என்பதை குத்திக் காட்டி இருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.





