நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நிலைக்கு வந்த டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ரஜினி ஸ்டலைில் இருக்கும் அவரது நடிப்பை ரசிகர்கள் மிக எளிதாக ஏற்றுக்கொண்டு கொண்டாடி வருகின்றனர், இன்னும் 25 படங்களை கூட எட்டாத நிலையில், அவர் விஜய், அஜீத் குமாருக்கு அடுத்த பொசிஷனுக்கு வந்துக்கொண்டு இருக்கிறார்.
ஆனால் சமீபத்தில் தேவையற்ற ஒரு சர்ச்சையில் சிக்கி தனது 50 சதவீத இமேஜை கெடுத்துக் கொண்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதுதான் இசையமைப்பாளர் டி இமான் கிளப்பிய குற்றச்சாட்டு விவகாரம். அது சமூக வலைதளங்களில் பற்றி எரிந்த நிலையில், இப்போது அதற்கான சுவடே இல்லாமல் மறைந்து போனது.
நேற்று முன்தினம் அயலான் வெளியானது. 6 ஆண்டுகளுக்கு பின் பெரிய போராட்டத்துக்கு பின் இந்த படம் வெளியானதே பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. இதில் நடித்த சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தையே விட்டுக்கொடுத்தார். அதுமட்டுமின்றி படம் ரிலீஸாக தடையாக இருந்த ரூ. 27 கோடி கடனை செலுத்தியும் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அயலான் படத்தை பொருத்தவரை நல்ல பாசிட்டிவ் ரிசல்ட்தான் கிடைத்திருக்கிறது. என்றாலும் படத்தில் இன்னும் நிறைய சுவாரசியங்களை சேர்த்திருக்க வேண்டும். அதே போல் பாடல்கள் குறிப்பிடும்படியாக இல்லை. ஏலியன் கேரக்டர் ரசிகர்களின் மனதில் ஒட்டவே இல்லை. இன்னும் ஏலியன் மீதான தொடர்பை அதிகரிக்கும் காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் போன்ற விமர்சனங்களும் இருக்கின்றன.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் மீது மற்றொரு குற்றச்சாட்டு வந்திருக்கிறது. அதாவது, தமிழ் சினிமாவில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில், பத்திரிகைகளில் விளம்பரம் தருவதற்கு கட்டுப்பாடு உள்ளது. அதாவது குறிப்பிட்ட அளவில் அனைவரும் ஒரே மாதிரி தர வேண்டும் என்பதுதான் அந்த விதிமுறை. ரஜினி, கமல் உட்பட புதுமுக நடிகரின் படமாக இருந்தாலும் அதுதான் நிபந்தனை.
ஆனால் இப்போது அயலான் படம் வெளியானதற்கு புல்பேஜ் ஆட், அதாவது முழுபக்க விளம்பரங்கள் பத்திரிகைகளில் தரப்பட்டு வெளிவந்திருக்கிறது. இது தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் தரப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இதற்கு மூலகாரணமாக இருப்பது சிவகார்த்திகேயன்தான். அவரது கவனத்துக்கு செல்லாமல், அவருக்கு தெரியாமல் இதுபோல் நடக்க வாய்ப்பில்லை. தயாரிப்பாளர் தரப்புக்கு இப்படி ஒரு நெருக்கடியை சீமராஜா உள்ளிட்ட படங்களில் இருந்தே சிவகார்த்திகேயன் கொடுத்து வருவதாக ஒரு சர்ச்சை இப்போது எழுந்துள்ளது.





