நடிகை ராதா, தமிழ் சினிமாவில் கடந்த 1980, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ராதா, அம்பிகா என்ற இந்த கேரள சகோதரிகள்தான், தமிழ் நடிகர்களின் திரை நாயகிகள். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்தி என பல படங்களில் அவர்களோடு டூயட் பாடியவர்கள்.
அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் அறிமுகமான நாயகி ராதா, தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில், பல வெற்றிப் படங்களில் நடித்தவர். கடைசியில் முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கும் ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
நடிகைகளை பொருத்த வரை எப்போதுமே அவர்களுக்கான மார்க்கெட் குறைவது இல்லை. சினிமாவில் நடிப்பது இல்லை என்றாலும், டிவி சேனல்களில் பல நிகழ்ச்சிகளில் நடுவர்களாக பங்கேற்று, எப்போதும் ரசிகர்களை சந்திக்கின்றனர். ராதா, அம்பிகா இருவருமே அதுபோன்ற நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
ஆனால் அம்பிகா அவன் இவன், உத்தம புத்திரன் போன்று அவ்வப்போது சில படங்களில் நடிக்கவே செய்கிறார். டிவி சீரியல்களிலும் நடிக்கிறார். ஆனால், ராதா நடிப்பதில்லை. அவரது இரண்டு மகள்களும் சில படங்களில் நடித்தனர். ஆனால் அவர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு வரவில்லை.
சமீபத்தில், ராதா தனது மகள் கார்த்திகாவுக்கு, மிக பிரமாண்டமாக திருமணத்தை நடத்தினார். அதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்ட பல பெரிய ஸ்டார் நடிகர்கள் பங்கேற்றனர். தவிர, பல நூறு பவுன் நகைகள், சீதனங்கள் என திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்தியிருந்தார் ராதா.
இதற்கிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில், தனக்கு பிடித்த இன்றைய நடிகர்கள் குறித்து மனம் திறந்து நடிகை ராதா கூறியுள்ளார். அதில், நடிகர் அஜீத்குமாரை தனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு படத்தில் நடிகர் விஜய் உடன் டான்ஸ் ஆட வேண்டும். நடிகர் சூர்யாவுடன் எமோஷனல் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று தன் ஆசையை கூறியிருக்கிறார் நடிகை ராதா.





