- Advertisement -
Homeபொழுதுபோக்குவறுமையிலும் நட்சத்திரங்களைக் கொத்தித் தின்னும் கற்பனைக்குக் குறைச்சல் இல்லை - ஞான பீடம் விருது குறித்து...

வறுமையிலும் நட்சத்திரங்களைக் கொத்தித் தின்னும் கற்பனைக்குக் குறைச்சல் இல்லை – ஞான பீடம் விருது குறித்து பேசிய கவிஞர் வைரமுத்து

- Advertisement -

சமீபத்தில் டெல்லியில் நடந்த விழாவில் மிக உயரிய விருதான ஞானபீடம் விருது பெற்ற கவிஞர் வைரமுத்து கூறியதாவது, ஞானபீட மேடையை நான் பெரிதும் மதிக்கிறேன்; ஆகையால் இதில் என் சுயபுராணம் பாட மாட்டேன். ஆனாலும் இந்த அறிவுத் திருக்கூட்டம் என் வாழ்வின் வைகறையை அறிந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். சுதந்திர இந்தியாவில் பிறந்த மண்ணைவிட்டு அகதியாய் வெளியேறிய கதைதான் என்னுடையது.

கார்காலத்தில் உப்பு விற்றவன்போல எனது பால்யம் கண்ணீராலும் தண்ணீராலும் சூழப்பட்டது. தமிழ்நாட்டின் தென்மேற்கு மூலையில், இந்தியாவின் வரைபடத்துக்குச் சிக்காத ஒரு கடைக்கோடியில், 60 வீடுகளேகொண்ட மெட்டூர் என்ற சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நான் பிறந்தேன். 1950-களில் வைகை நதியின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்டது; அதன் நீர் தேங்கும் பரப்புக்காக 14 கிராமங்கள் காலிசெய்யப்பட்டன.

- Advertisement -

அவற்றில் ஒன்றுதான் நான் பிறந்த ஊர். இடுப்புவரை மூழ்கிய ஊர் கழுத்துவரை மூழ்கத் தலைப்படும்போது, அந்தக் கிராமத்தின் தாயொருத்தி உலர்ந்த கண்ணீரோடும், நனைந்த சேலையோடும் கதறிக்கொண்டே கரையேறுகிறாள். அவள் இடுப்பில் ஒரு பெண் குழந்தை, கைப்பிடியில் ஓர் ஆண் குழந்தை.

அப்போதெல்லாம் அவளுக்குத் தெரியாது… இடுப்பிலுள்ள பெண் குழந்தை அடுத்த ஆறு மாதங்களில் இறந்துபோகும் என்றும், கைப்பிடியாய்க் கூட்டிவந்த ஆண் குழந்தை அடுத்த எழுபது ஆண்டுகளில் ‘ஞானபீட விருது’ பெறும் என்றும். அன்று கால்சட்டை நனைய நனையக் கரைசேர்ந்த சிறுவன்தான் இன்று இந்த ஞானபீட மேடையில் உங்கள் முன் நிற்கிறான்; அவன் பெயர் வைரமுத்து.

- Advertisement -

பிழைக்கவந்த வடுகபட்டியில் அவனது ‘அ’னா ‘ஆ’வன்னா எழுதப்படுகிறது. பள்ளிக் கல்வி – விவசாயம் என்ற இரண்டிலும் ஈடுபடுத்தப்படுகிறான். உழுதுகொண்டும், மாடுமேய்த்துக்கொண்டும், குடும்பத்தின் விவசாய வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டும் அவனது வாழ்வு நிகழ்கிறது. ஆடு மாடுகளின் ஓசைகளைவிட, எங்கோ பாடும் பறவை அவன் மூளைக்குள் முட்டையிடுகிறது.

வைக்கோலை விரித்துச் சாக்குப்பையைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தபோதும், நிலவோடு உரையாடல் நின்றபாடில்லை. உலையில் கொதிக்க அரிசியில்லை என்ற வறுமையிலும் நட்சத்திரங்களைக் கொத்தித் தின்னும் கற்பனைக்குக் குறைச்சல் இல்லை. வகுப்பு அவனுக்கு எழுத்துகளைச் சொல்லிக்கொடுத்தது; வறுமை அவனுக்கு வாழ்க்கையைச் சொல்லிக்கொடுத்தது. இரண்டும் அவனைக் கையோடு கூட்டிவந்து கவிதையிடம் சேர்த்தன என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்