பொங்கல் பண்டிகையை ஒட்டி, சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் ஒன்று ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகின. இதுபோக பாலிவுட்டில், விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் ஆகியோர் நடிப்பில் எடுக்கப்பட்ட மெரி கிறிஸ்மஸ் திரைப்படமும் வெளியிடப்பட்டது. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் உள்பட நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன.
இதில், விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்றது. திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு, ரசிகர்கள் ஓரளவு வரவேற்பை கொடுத்தனர். ஆனால், தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் இந்த திரைப்படம் ரீச் ஆகவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதற்குக் காரணம், அந்த திரைப்படம் ஏலியன் கான்செப்டில் எடுக்கப்பட்டதுதான். 2018 ஆம் ஆண்டே இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில், பொருளாதாரப் பிரச்சினை காரணமாக அயலான் படம் முடங்கி போனது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில், கடந்த வருடம் படத்தை வெளியிடுவதற்கான முழு முயற்சியின் ஈடுபட்ட சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் அதில் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு கடந்த 12 ஆம் தேதி அது வெளியானது. ஆனால் எதிர்பார்த்த விமர்சனத்தை அயலான் திரைப்படம் பெறவில்லை. படத்தில் ஏலியன் கதாபாத்திரம் வரும் வரை, ஒரு தொய்வு இருப்பதாகவும் அதன் பிறகு இடைவெளி காட்சி வரை படம் விறுவிறுப்பாக இருப்பதாகவும் விமர்சனங்கள் இருந்தன. ஆனால் இரண்டாம் பாதி சுத்தமாக எடுபடவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். கலகலப்பை மட்டுமே எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளாக எடுக்கப்பட்டிருந்தது சோர்வை கொடுத்தது.
இருப்பினும், அயலான் திரைப்படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ்களின் வருகை தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக, படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டது. படக்குழுவும் நான்கே நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் குவித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் கள நிலவரம் அப்படி இல்லையாம்.
இதுவரை அயலான் திரைப்படம், தமிழ்நாட்டில் முப்பது கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தை அதிக விலைக்கு கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்களாம். இது ஒரு பக்கம் இருக்க, கேப்டன் மில்லரும் அந்த அளவு வசூல் ஈட்டவில்லை என்று கூறப்படுகிறது. அருண் விஜய் படமும் அதே ரகத்தில் இருக்க, இந்த பொங்கல் திரையரங்கு நிர்வாகத்திற்கு அந்த அளவு சொல்லிக் கொடும்படியாக இல்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





