இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. துருக்கி, ஐதராபாத், சென்னை என அடுத்தடுத்து படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப்போது கிழக்கு கடற்கரை சாலை, கோவளம் பகுதியில் உள்ள பங்களாவில் ஷூட்டிங் நடக்கிறது.
இந்த படத்தில் விஜய் உடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், விடிவி கணேஷ், அஜ்மல், வைபவ், சிநேகா, ரம்யா கிருஷ்ணன், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் மைக் மோகன், நீண்ட நாட்களுக்கு பின் நடிக்கிறார். அதுவும் கோட் படத்தில் ஆண்டி ஹீரோ கேரக்டரில் நடித்து வருகிறார்.
நீண்ட இடைவௌிக்கு பிறகு இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கிறார். கடந்த 1990களில் நடிகர் பிரசாந்த், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர். பல வெற்றிப்படங்களை தந்தவர். அவருக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளமே இருந்தது என்பதும் உண்மை.
ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்த ஜீன்ஸ் படம் பெரிய வரவேற்பை பெற்றது. பெரிய அளவில் பேசப்பட்ட படமாகவும் அமைந்தது. இதில், உலக அழகி ஐஸ்வர்யா ராய், முதன்முறையாக நடித்திருந்தார். பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக்கூட்டம் அதிசயம் பாடல் காட்சியில், உலகின் 7 அதிசயங்களை இயக்குநர் ஷங்கர் காட்டியிருந்தார்.
வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்த பிரசாந்த், பல வெற்றிப்படங்களை தந்தும் ஒரு கட்டத்தில் அவரது படங்கள் சரியாக போகவில்லை. திருமண வாழ்க்கையிலும் மிகப்பெரிய பின்னடவை சந்தித்தார். மம்பட்டியான், பொன்னர் சங்கர், வின்னர் என எதிர்பார்த்த படங்கள் எல்லாமே தோல்வியாக இருந்தது.
இப்போது கோட் படத்தில் பிரசாந்த், விஜய் நண்பராக நடிக்கிறார். ஏற்கனவே, நடனம் ஜிம்னாஸ்டிக் என கற்றுக்கொண்டுதான் பிரசாந்த், சினிமாவுக்குள் நடிக்கவே வந்தார். அதனால் கோட் ஷூட்டிங்கில் சண்டை, நடனம் என முக்கிய காட்சிகளில் அசத்துகிறார் பிரசாந்த். அவரது மிரட்டலான நடிப்பை பார்த்து, இவர் பழசை எல்லாம் இன்னும் மறக்காமல், திறமையை வெளிப்படுத்துகிறாரே என விஜய், பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் அசந்து போயிருக்கின்றனர்.





