தமிழ் சினிமாவில் 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் கமல்ஹாசன். இன்று 70 வயதுகளை கடந்தும் ஜொலிக்கும் நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள அவர் இப்போது ராஜ்யசபா எம்பி ஆகவும் இருந்து வருகிறார்.
ஆரம்பத்தில் திமுக ஆட்சியை வாரிசு அரசியலை எதிர்த்து வீரவசனம் பேசிய கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் திமுகவிடமே அடைக்கலம் அடைந்தது பெரிய அதிர்ச்சியை அவரது ரசிகர்களுக்கு தந்தது. எனினும் மக்கள் ஆதரவு கிடைக்காத நிலையில் அவர் வேறு வழியின்றி அந்த முடிவுக்கு சென்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் 2 தினங்களுக்கு முன்பு நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் தனது முதல் கன்னி உரையை நிகழ்த்தி காட்டினார். அவரது ஆவேசமான பேச்சு இணையத்தில் வைரலானது. இதுகுறித்து நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் கவிஞர் வைரமுத்து தனது பதிவில் சிலாகித்து கூறியிருந்தார்.
கவிஞர் வைரமுத்து அந்த பதிவில், அன்புள்ள கமல் எம்பி அவர்களே, கன்னிப் பேச்சல்ல காளைப்பேச்சு ஒரு தேசியவாதியின் மொழி. ஆனால் தமிழ்த் சாதியின் குரல். நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது, தாடி சிங்கத்தின் தமிழ் கேட்டும் ஆங்கிலம் கேட்டும்; என்னை அறியாமல் மீசை முறுக்கின என் கட்டை விரலும் சுட்டுவிரலும். களிறே பிளிரு! என்று தனது பதிவில் வைரமுத்து பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார்.
டில்லியில் இருந்து நேற்று சென்னை திரும்பிய கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, நல்ல கருத்து விவாதத்துக்கு உள்ளாக வேண்டும். தமிழனாக நல்ல கருத்து பேசிவிட்டதாக எனக்கு தோன்றுகிறது. அதை மறுப்பவர்கள் அதை விவாதிக்க வேண்டும். விவாதித்து உண்மை என்ன என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இது வந்து ஜனநாயகம். இப்படித்தான் இருக்கும். விவாதங்கள் தொடர வேண்டும். எங்கள் கூட்டணி மொத்த இந்தியாவுடன். இந்தியா தான் என்னுடைய நலன். உங்களுடைய நலனும் கூட. கூட்டணி எல்லாம் 5 வருஷங்களுக்கு ஒருமுறை பண்றது இல்லையா? ஐடியாலஜி தான் முக்கியம். அதை நோக்கி தான் நான் போயிட்டு இருக்கேன். பார்லிமென்ட்டில் நான் பேசுவது புரியவில்லை என்று சொல்பவர்கள் நிறைய படிக்க வேணும், நிறைய படிக்கணும் என்று நடிகர் கமல்ஹாசன் அவரது பாணியில் பதில் கூறினார்.





