நடிகர் அஜீத்குமார் நடிப்பில், அஜர்பைஜானில் கடந்த 4 மாதங்களாக விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்து வந்தது. படப்பிடிப்பின் இடையிடையே இயற்கை சீற்றங்கள் ஏற்படுத்திய பிரச்னையால், பலமுறை படப்பிடிப்பு தடைபட்டது. எனினும், படத்தின் பெயரே விடாமுயற்சி என்பதால், படக்குழு விடாமுயற்சியாக படப்பிடிப்பை நடத்தியது.
ஆனால் மணல் புயல், பனிப்பொழிவு, கடும் குளிர், கனமழை என மாறி மாறி இயற்கை சீற்றங்கள் வெளிப்பட்டதால், படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாமல் படத்தின் தயாரிப்பாளர் மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் திக்குமுக்காடி போயினர். இதனால் இடையிடையே ஒருவாரம், பத்து நாட்கள் என இடைவெளி விட்டு விட்டு படப்பிடிப்பை நடத்தினர்.
அதனால் விடாமுயற்சி படப்பிடிப்பு அடிக்கடி தடைபட்டு மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்ட நிலையில், இதுவரை 50 சதவீதமே முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் பாதி படம் ஷூட்டிங் நடத்தப்பட வேண்டும். ஆனால் பிப்ரவரி மாதம் இறுதி வரை தான் அஜீத்குமார் கால்ஷீட் தந்துள்ளார்.
இந்த நிலையில், 2 வாரங்களுக்கு மேல் சென்னையில் இருந்த விடாமுயற்சி படக்குழு, சில தினங்களுக்கு முன்புதான் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பை தொடர அஜர்பைஜான் புறப்பட்டுச் சென்றது. ஆனால் அங்கு செட் ஒர்க் முடியாததால் சில நாட்கள் வேலையின்றி படக்குழு காத்திருந்த நிலையில், பல லட்சம் ரூபாய் தினமும் லைக்கா தயாரிப்பு நிறுவனத்துக்கு பில் எகிறியது.
இன்று படப்பிடிப்பை துவங்க இருந்த நிலையில் அஜர்பைஜானில் மிக கடுமையான பனிமழை பொழிந்து வருகிறது. 23ம் தேதியே, அந்த நாட்டு வானிலை மையம் 2 தினங்களில், அஜர்பைஜானில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர். இது நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து விடாமுயற்சி படப்பிடிப்பை மொத்தமான டிராப் செய்துவிட்டு, இன்று சென்னை திரும்புகிறது விடாமுயற்சி படக்குழு. அஜீத்குமார் மட்டும் துபாயில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் அடுத்து, ஷார்ஜாவில் விடாமுயற்சி படப்பிடிப்பை நடத்துவது குறித்து படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.





