விஜய் டிவியில் காமெடி ஷோவில் நடித்து அதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தானம். அதன்பிறகு சினிமாவில் காமெடி நடிகராக நடித்தார். உதயநிதி ஸ்டாலின், சந்தானம் காமெடி கூட்டணியில் உருவான சில படங்கள் பெரிய வெற்றியை பெற்றது. இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார் நடிகர் சந்தானம்.
தில்லுக்கு துட்டு, ஏ ஒன், டிடி ரிட்டர்ன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ராஜா ராணி, நண்பேன்டா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஆல் இன் ஆல் அழகுராஜா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் காமெடி ரோலிலும், கதாநாயகனாக சில படங்களிலும் நடித்தார்.
சந்தானத்தை பொருத்தவரை கவுண்டமணியை போல மற்றவர்களை கலாய்ப்பதுதான் இவரது ஸ்டைல். ஒரு கட்டத்துக்கு பிறகு இதை ரசிக்க முடியவில்லை. அதனால் சுதாரித்துக்கொண்ட சந்தானம் ஹீரோவாக நடித்தார். முதலில் ஹிட் படங்களை கொடுத்த அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன.
அதனால் சந்தானம் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கதாநாயகனாக நடித்த படங்களும் ஓரளவு வெற்றியை பெற்றன. ஆனால் குலுகுலு போன்ற சில படங்கள் பலத்த பிளாப் படங்களாக போய்விட்டன. இதனால், முன்பு போல பரபரப்பாக இல்லாமல், சமீப காலமாக மார்க்கெட் இல்லாமல் இருந்து வருகிறார் நடிகர் சந்தானம்.
இப்போது வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கிறார். டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகிதான் இந்த படத்தின் டைரக்டர். சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஜாக்குவின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து பேசிய நடிகர் சந்தானம், இந்த படம் குறித்து நிறைய சர்ச்சைகள் வருகிறது. ஆனால் படத்தில் அப்படி எதுவும் இருக்காது. இது மிகவும் ஜாலியான படம். வடக்குப்பட்டி ராமசாமி கதையை தான் இதில் இயக்குநர் எடுத்துள்ளார். அவரும் கவுண்டமணி ரசிகர். நானும் கவுண்டமணி ரசிகன்தான். அதனால்தான் படத்துக்கு இந்த பெயர். நான் சினிமாவுக்கு நடிக்க வந்தது மக்களை சிரிக்க வைக்கதான். மற்றபடி யார் மனதை புண்படுத்துவதும், தாக்கி பேசுவதும் என் எண்ணம் கிடையாது. இது கடவுளுக்கும் என் ரசிகர்களுக்கும் தெரியும் என்று கூறியிருக்கிறார்.





