நடிகர் விஜய், இன்று தனது கட்சி பெயரை அறிவித்ததால், தமிழகமும் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற அந்த பெயரை இந்திய தேர்தல் தலைமை ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகவும், விரைவில் கட்சி பணிகளை துவக்க இருப்பதாகவம் விஜய் அறிக்கை வெளியிட்டு தெரிவித்து இருந்தார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து சில ஆண்டுகளாக அரசல் புரசலாக தகவல்கள் பரவிய நிலையில், விஜய் தரப்பில் இருந்து அதற்கான எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை.அவர் நடிக்கும் படங்களில் கூட அரசியல் வசனங்களோ, பஞ்ச் டயலாக்குகளோ இடம்பெறவில்லை.
அஜீத்குமார் – விஜய் படங்களுக்கு இடையிலான மோதல்தான் பெரிய அளவில் தமிழக மக்கள் மனதில் இருந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வருவதெல்லாம் ரசிகர்களாக கிளப்பி விடுகிற வதந்தி, அவர் பாட்டுக்கு சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார் என்றுதான் பலரும் நினைத்தனர்.
ஆனால் தமிழகம் முழுவதும் இருந்து 234 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியரை நேரில் அழைத்து ரொக்கப் பரிசுகள், மேடையில் பாராட்டு என விஜய் செய்த போதுதான் சிலருக்கு, இது விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமோ என சந்தேகப்பட்டனர். மேலும், தென்மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நேரில் சென்று நிவாரண உதவிகளை விஜய் வழங்கியதும் அந்த எண்ணத்தை அதிகப்படுத்தியது.
இந்நிலையில், இன்று தமிழக வெற்றி கழகம் என கட்சி பெயர் பொறிக்கப்பட்ட லெட்டரில், தனது அரசியல் பிரவேசம் குறித்து நேரடியாக அறிவித்துள்ள விஜய், இனி சினிமாவில் நடிக்கப் போவது இல்லை. இனி முழு நேரமும் அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவை செய்வேன். மக்கள் நலப்பணிகளே இனி என் வாழ்க்கையின் லட்சியம் என்று தெளிவாக கூறிவிட்டார்.
நடிகர் விஜயை ஹீரோவாக வைத்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பேரரசு இதற்கு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், வேணாம் விஜய் சார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்கும் முதல் நாள் இரவு வரை திரைப்பட பணியில் இருந்தார் என்று கூறியிருக்கிறார். அதாவது, இப்போதே சினிமாவை விட்டு விலக வேண்டாம். முதலமைச்சராக ஆகும் வரை சினிமாவில் தொடர்ந்து பணிசெய்யுங்கள் என இயக்குநர் பேரரசு அறிவுறுத்தியுள்ளார்.





