தர்பார், அண்ணாத்த என தொடர் தோல்விகளை கொடுத்துக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு, மீண்டும் வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்தது ஜெயிலர் திரைப்படம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான இந்த திரைப்படம், எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வசூல் ஈட்டியது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் வசூல் குவித்ததால், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த் நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக அளித்தது.
ஜெயிலர் திரைப்படம் கொடுத்த வெற்றியால், உற்சாகத்தில் இருக்கும் ரஜினிகாந்த் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் லைகா நிறுவனத்துடன் இரண்டு திரைப்படங்களின் நடிக்க ஒப்பந்தமானார் சூப்பர் ஸ்டார். இதில் ஒரு படத்தை ஜெய் பீம் படத்தை எடுத்த ஞானவேல் இயக்கி வருகிறார். இதற்கு வேட்டையன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக ஹைதராபாத்தில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துடன், படத்தின் பணிகளை நிறைவு செய்ய ஞானவேல் திட்டமிட்டு இருக்கிறாராம். இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட நடித்துள்ளனர். இதில் ஓய்வு பெற்ற அதிகாரியாக ரஜினி நடிப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே லைக்கா நிறுவன தயாரிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் மற்றொரு திரைப்படமான லால் சலாம், வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அவர் மொய்தின் பாய் என்னும் கதாபாத்திரத்தில் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கதாநாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் வருகின்றனர். இதுபோக செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோரும் படத்தில் இருக்கின்றனர்.
இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் ரஜினிகாந்த் 45 நிமிடங்கள் வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கிரிக்கெட் மற்றும் மதப் பிரச்சனையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற இதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ஐஸ்வர்யா, தனது தந்தை சங்கீ அல்ல என்றும், மத நல்லிணக்கம் சார்ந்து உள்ளவரால் மட்டும் தான் இந்த படத்தில் நடிக்க முடியும் என்றும் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு இணையத்தில் வைரல் ஆனது.
இப்படியான சூழலில் லால் சலாம் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் ஒன்பதாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் புதிய தகவலாக லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த்துக்கு மகனாக விக்ராந்த் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரராக அவர் படத்தில் வருகிறார். இந்த படத்தின் மூலம் விக்ராந்தின் திரையுலக பயணம் அடுத்த தளத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





