தர்பார், அண்ணாத்த என அடுத்தடுத்து இரண்டு படுதோல்விகளை கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த இரண்டு திரைப்படமும் ரஜினி படம் தானா என்னும் தெரியாத அளவுக்கு திரையரங்கங்களை விட்டு மிக விரைவாக வெளியேறின. முந்தைய காலங்களில் ரஜினி திரைப்படம் என்றால் அதனைத் திருவிழா போன்று ரசிகர்கள் கொண்டாடிய சூழலில், அது தற்போது மாறிவிட்டதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்தனர்.
ரஜினிக்கும் கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படமும் கை கொடுக்கவில்லை. எப்படியாவது ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்று இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினி, இறுதியில் தோல்வியை தான் கண்டு வந்தார். இப்படியான சூழலில் தான் அவருக்கு ஜெயிலர் திரைப்படம் யோசிக்க முடியாத பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான இந்த திரைப்படம், 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. படத்தில் இடம்பெற்ற கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோர் ரஜினிகாந்த் உடன் இணைந்து மாஸ் காட்டியதால் படம் கிளாசிக்காக வாகை சூடியது. இந்த வெற்றியால் படு குஷி ஆனார் ரஜினிகாந்த்.
இதனைத் தொடர்ந்து, அவர் ஜெய் பீம் படத்தை எடுத்த இயக்குனர் ஞான வேலுடன் வேட்டையன் திரைப்படத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஆந்திர மாநிலத்தில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் பகத் பாசில், ரானா மஞ்சு வாரியர் துசாரா விஜயன் ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் அமிதாபச்சன் நடித்திருக்கிறார். இதுபோக தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்திலும் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தார்.
இதில் ரஜினிக்கு மொய்தீன் பாய் என்னும் சிறப்பு கதாபாத்திரத்தை அவரது மகள் ஐஸ்வர்யா கொடுத்தார். இதுபோக விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்க, லைக்கா நிறுவனம் தயாரித்தது. இந்த திரைப்படம் கடந்த ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரஜினிகாந்த் நடிப்பு சிறப்பாக இருந்தாலும், இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. அது மட்டுமல்ல ஆரம்பத்தில் இருந்தே இந்த திரைப்படத்திற்கு என்று பெரிய எதிர்பார்ப்பும் இல்லாததால், முன்பதிவும் மிக சுமாராகவே இருந்தது. இப்படியான சூழலில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் இந்த திரைப்படம் பெரும் 11 கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்தில் வசூல் செய்திருக்கிறது. ரஜினிகாந்த் இருந்தும் ஒரு திரைப்படத்திற்கு இந்த நிலைமையா என்று பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.





