நடிகர் விஜய், இப்போது தமிழக வெற்றி கழகம் தலைவராக தனது அரசியல் பணிகளை துவங்கி விட்டார். கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படப்பிடிப்பு இடையிடையே அவ்வப்போது அரசியல் சார்ந்த பணிகள் குறித்து தொடர்ந்து, தனது கட்சி பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்துடன் ஆலோசித்து வருகிறார்.
அடுத்த மாதம் இறுதிக்குள் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் ஷூட்டிங் நிறைவடைய உள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் மதுரையில், தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளார்.
தமிழ் சினிமா சார்ந்த நடிகர்கள் பலரும் தமிழக அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால் சினிமாவில் கிடைத்த அதே பெயர், புகழ், மரியாதை மக்கள் மத்தியில் கிடைத்தது. இதுவரை இரண்டு பேருக்கு மட்டும்தான். ஒருவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அடுத்து புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். ஆனால் மற்ற யாராலும் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெற முடியவில்லை.
குறிப்பாக நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், கே. பாக்யராஜ், சரத்குமார், கார்த்திக், கருணாஸ், மன்சூர் அலிகான், டி ராஜேந்தர் ஆகியோரை மக்கள் ஏற்கவில்லை. கட்சி பெயர் கூட மக்களிடம் எடுபடாத அளவுக்கு அவர்களது அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி விட்டது. ஆனால் சரத்குமார் போன்றவர்கள் அடுத்த முதல்வர் நான்தான் என சீரியஸான காமெடி செய்து வருகின்றனர்.
அரசியலில் இப்படி தோற்றுப்போன நடிகர்களில் ஒருவராக போய்விடக் கூடாது என்ற அச்சத்தில்தான், கடைசி வரை ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் எம்ஜிஆர், விஜயகாந்த் போல வெற்றியை சந்திப்பேன் என்ற துணிச்சலுடன் களத்தில் இறங்கிய விஜய், இந்த ஒரு விஷயத்திலேயே மக்களிடம் ஒரு நல்ல அபிமானத்தை பெற்றுவிட்டார். தவிர, விஜய் மீது ரசிகர்கள் அல்லாத பொதுவான மக்களிடம் ஒரு நல்ல அபிமானம், அபிப்ராயம் இருக்கிறது.
இதற்கிடையே வரும் ஏப்ரலில் மதுரையில் நடக்க உள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் சில முக்கிய விருந்தினர்களை அழைக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அந்த வகையில் இந்த மாநாட்டில் முக்கிய விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், குறிப்பாக நடிகர் அஜீத்குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அஜீத்குமார் நிச்சயமாக பங்கேற்க இருப்பதாகவும், அவரே இதற்கு சம்மதித்து இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. கலைத்துறை சார்ந்த ஒருவரே, முதல்வராக வருவது சினிமாவுக்கும் நல்லது என்பதால் இந்த முடிவை அவர்கள் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.





