தமிழ் சினிமாவில் இசைஞானியாக திகழ்பவர் இளையராஜா. இவர், 1000 படங்களுக்கு மேல் பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்தவர். நான் இசையமைத்த வகையில், அந்த பாடல்கள் அனைத்துமே எனக்குதான் சொந்தம் என்று இளையராஜா கூறியிருந்தார். இதுகுறித்த வழக்கும் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், இப்படி பாட்டு எழுதிய கவிஞர்களும், இந்த பாடல்களை சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது என்று நீதிபதிகளே கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் படிக்காத பக்கங்கள் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் பெரிதா, இசை பெரிதா என்பது குறித்து பேசியிருந்தார். இசையும், பாடல் வரிகளும் இணைந்ததுதான் பாட்டு. இதை அறியாதவன் ஞானி அல்ல, அஞ்ஞானி என்று அப்போது வைரமுத்து பேசியது, வைரலாகியது.
இதையடுத்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் நேற்று, ஒரு வீடியோவை வெளியிட்டு பகிரங்கமாக வைரமுத்துவை பற்றி பேசியுள்ளார். அந்த வீடியோவில் சகட்டுமேனிக்கு வைரமுத்துவை திட்டியிருக்கிறார். வைரமுத்துவை வளர்த்து விட்டதே நாங்கள் தான், இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து இந்த அளவுக்கு வளர்ந்திருக்க மாட்டார். வைரமுத்துவுக்கு கொஞ்சம் கூட நன்றி, விசுவாசம் இல்லை என்றும் அந்த வீடியோவில் கங்கை அமரன் பேசியிருக்கிறார்.
வைரமுத்து நல்ல பாடலாசிரியர்தான். ஆனால், அவர் நல்ல மனிதர் கிடையாது. இனிமேல் வைரமுத்து, இளையராஜா பற்றி தவறாக ஏதாவது பேசினால் நடப்பதே வேறு எனவும் அந்த வீடியோவில் கங்கை அமரன் எச்சரித்துள்ளார். இளையராஜா பெயரை கூட குறிப்பிடாமல்தான், வைரமுத்து நாகரிகமாக பேசியிருந்தார். அந்த விழாவில் வைரமுத்து பேசும்போது, பாடல் வரிகளும் இசையும் கலந்ததுதான் ஒரு நல்ல பாடல் என்ற கருத்தை முன்வைத்தார். இது தெரியாமல் இசை பெரியதா, பாடல் பெரியதா என்று கேட்பவன் ஞானி அல்ல. அஞ்ஞானி எனவும் சுட்டிக் காட்டி இருந்தார்.
ஆனால் வைரமுத்து பேசியதற்கு, கங்கை அமரன் இப்படி பகிரங்கமாக வீடியோ வெளியிட்டு தரக்குறைவாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கவிஞர் வைரமுத்து மிகப்பெரிய கவிஞர். பல தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர். இலக்கிய படைப்புலகில் அவருடைய பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஒரு சாதனையாளரை இப்படி கங்கை அமரன் வாய் கூசாமல் களங்கப்படுத்தி பேசியது தவறு. தேவையில்லாமல் இந்த விஷயத்தை கங்கை அமரன் ஊதி பெரிதாக்கி விட்டார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இசைஞானி இளையராஜா இசையில் எந்த குறையும் சொல்ல முடியாது. தலையில் வைத்துக் கொண்டாட வேண்டிய ஒரு இசை வித்வான்தான். அதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அவரது கர்வமும், தலைக்கணமும், அகம்பாவமும் யாராலும் ஏற்க முடியாதது. ஒரு பாடல் உருவாக, வெற்றி பெற பல பேர் காரணமாகின்றனர். ஆனால் அந்த பாடலுக்கு நான் ஒருவன் மட்டுமே உரிமையாளன் என்று இளையராஜா சொல்வது அபத்தமானது. அதை தான் வைரமுத்து சுட்டிக் காட்டியிருந்தார். இதற்கு கங்கை அமரன் ஆவேசப்படாமல் பொறுமையாக யோசித்திருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் அட்வைஸ் செய்துள்ளனர்.





